வி-ரை:இது பருவங் கண்டு ஆற்றாத தலைவியது கூற்றாகும்.
இ-ள்: பரந்து விளங்குகின்ற மேகங்கள் நாணால் பூட்டப்படாத வில்லை வளைத்து (அதாவது இந்திரவில்லைத் தன்னைகத்தே கொண்டு) எவ்விடத்தும் தீட்டப்படாத அம்புகளைச் (அதாவது மழைத் துளிகளைச்) சொரிகின்றன; மயில்கள் கூட்டமாகக் காணாத கண்களைப் (அதாவது பீலிக் கண்களைப்) பரவச் செய்கின்றன, இத்தகைய கார்காலத்தில் பிரிவால் யாம்
இறந்துபடுதலாகிய கொடும்பழிக்கு நாணாது நம்மைத் தலைவர் மறந்தார் என்பதாம்.
வில்லிற்குப் பூட்டுதலும், அம்பிற்குத் தீட்டுதலும், கண்ணிற்குக் காணுதலும் அவ்வவற்றிற்குரிய வினைகளாம். ஈண்டு அவ்வினைகளை மறுத்தலால் முறையே இந்திரவில், மழைத்துளி, பீலிக்கண் என்ற பொருள்கள் புலப்படுதலின், இது வினையெதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல் ஆயிற்று.
2. பொதுவகையாற் காரணம் விலக்கிக் காரியம் புலப்படுப்பது.
எ-டு: காரண மின்றி மலயா நிலங்கனலும்
ஈர மதிவெதும்பற் கென்னிமித்தம் - காரிகையார்க்
கியாமே தளர வியல்பாக நீண்டனகண்
தாமே திரண்ட தனம்'
நிமித்தம் - காரணம். மலயாநிலம் - தென்றல். தனம் - முலை.
வி-ரை, இ-ள்:: பொதிய மலையிலிருந்து வரும் தென்றற் காற்று காரணமின்றியே வெதுப்புகின்றது ; இயல்பாகவே குளிர்ச்சியையுடையசந்திரன் இப்பொழுது வெதுப்புதற்குக் காரணம் யாது? யாம் தளருமாறு இவ்வழகிய மகளிர்க்குக் கண்கள் இயல்பாகவே நீண்டுள்ளன, கொங்கைகளும் காரணமின்றி இயல்பாகவே திரண்டுள்ளன என்பதாம்.
கனலுதற்கும், வெதும்புதற்கும், தளர்தற்கும், திரட்சி பெறுதற்கும் உளவாகிய உலகறி காரணங்களைப் பொதுவகையால் 'காரணமின்றி' எனவும்,' என்னிமித்தம்' எனவும், 'இயல்பாக' எனவும் `தாமே' எனவும் விலக்கி, அவற்றின் காரியமாய கனலுதல் முதலியவற்றைக் கூறியிருத்தலின், இது பொதுவகையாற் காரணம் விலக்கிக் காரியம் புலப்படுப்பது ஆயிற்று.
குறிப்பு விபாவனை
எ-டு: 'பாயாத வேங்கை மலரப் படுமதமா
பூவாத புண்டரிகம் என்றஞ்சி - மேவும்
பிடிதழுவி மாறதிருங் கானிற் பிழையால்
வடிதழுவும் வேலோய் வரவு.'
இது குறிப்பு விபாவனையின் வேறுபாடாம். இதன் வேறுபடு அறிந்துகொள்க.
பாயும்வேங்கை - புலி. பாயாத வேங்கை- மரம். பூக்கும் புண்டரிகம்- தாமரை. பூவாத புண்டரிகம் - புலி. மதமா - யானை. தழுவல் - சேர்தல், ஆல் - ஆசை; வடி - கூர்மை.