பக்கம் எண் :
 
138தண்டியலங்காரம்

பஞ்சரம் -இடம். அகன்றொழிவார் - விட்டு நீங்குவார்.

வி-ரை, இ- ள் : நெடிய திருவுருவத்தை யுடைய திருமால் வெஃகா, பாடகம், ஊரகம் ஆகிய இடங்களைத் தனக்கு இடமாகக் கொண்டு, அவற்றில் முறையே கிடந்தான், இருந்தான், நின்றான் ; மன்றுகள் பல நிறைந்ததும் , மதில் சூழ்ந்ததும் ஆன காஞ்சீபுரத்தின் பெருமை இதுவன்றோ? இத்தகைய சிறப்பு மிக்க காஞ்சிப்பதியை மனிதர்கள் எங்ஙனம் விட்டு நீங்குவர் ? என்பதாம்.

இப்பாடற்கண் இரண்டாம் வரியில் வெஃகா, பாடகம், ஊரகம் என நிறுத்தியதற்கேற்ப, மூன்றாம் வரியில் உள்ள சொற்களைக் கிடந்தான், இருந்தான், நின்றான் என மாற்றிப் பொருள் கோடலின், இது நிரலே நிறுத்தி மொழிமாற்றிப் பொருள் கொள்வதாயிற்று. (40)

17. ஆர்வமொழியணி

67. ஆர்வ மொழிமிகுப்ப(து) ஆர்வ மொழியே.

எ-ன், நிறுத்த முறையானே ஆர்வமொழி என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

இ- ள் : உண்ணிகழ்ந்த ஆர்வம்பற்றி நிகழும் மொழி மிகத்தோன்றச் சொல்லுவது, ஆர்வமொழி என்னும் அலங்காரமாம் எ- று.

'உண்ணிகழ்ந்த ' என்பது மேல்வரும் அதிகாரத்தால் கொள்ளப்பட்டது.

எ- டு : 'சொல்ல மொழிதளர்ந்து சோருந் துணைமலர்த்தோள்
புல்ல விருதோள் புடைபெயரா - மெல்ல
நினைவோ மெனில்நெஞ் சிடம்போதா தெம்பால்
வனைதாராய் வந்ததற்கு மாறு '

இ-ள்: நின் முன்னின்று மறுமொழிதர முயல்வேமாயின், எங்கள் மொழியானது தடுமாறிச் சோர்வுபடா நின்றது; நின் இணைமலர்த் தோள்களைத் தழுவ முயல்வேமாயின், எங்கள் இரண்டு தோள்களும் இடமுண்டாக வளர்வன அல்ல; மெல்ல நின்புகழை நினைப்போமாயின், எங்கள் உள்ளம் இடம் போதாது ; அலங்கரிக்கப்பட்ட மாலையை யுடையானே ! எம்மிடத்து நீ வந்த இதற்குக் கைம்மாறு யாதென்று சொல்லப்படும் ? எ- று.

மாறு - ஈடு.

வி-ரை: இது தான் கூறியவாறு பொய்யாது குறிநேர்ந்த தலைவனிடத்துத் தலைவி கூறியதாகும்.

இப்பாடற்கண் தலைவி தலைவன் மாட்டுள்ள ஆர்வ மிகுதியால், தன் மொழி சோரும், தோள் புடைபெயரும், நெஞ்ச இடம் போதாது எனக் கூறுதலின் இது ஆர்வமொழியாயிற்று.

(41)

18. சுவையணி

68. உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற
எண்வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே.