பக்கம் எண் :
 
பொருளணியியல்155

சோதி - ஒளியும், புகழும். இரவி - சூரியனும், சோழனும், கரம் - கிரணமும், கையும். இரவு - இருளும், இரத்தலும், மாதிடத்தான் - சிவனும், மிக்க திட்பத்தையுடைய சோழனும். மன்மதன் - காமனும்,மன்னரது வலியும். மதி - சந்திரனும், அறிவும். குமுதம் - ஆம்பலும் பூசல மகிழ்ச்சியும். தனதன் - குபேரனும். செல்வத்தைக் கொடுக்கிற சோழனும். இருநிதி - சங்கநிதி பதுமநிதியும், மிக்க பொருளும்.

வி-ரை: எடுத்துக் கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றற்கு ஒன்று விரோதமின்றி அவ்வப் பொருள்களுக்கும் ஏற்ப பின்னருள்ளதொடரை அமைத்துக் கூறுவது அவிரோதச் சிலேடையாம்.

இப்பாடற்கண் அடிதொறும் இவ்வணி அமைந்துள்ளது.(1)'சோதியிரவி' என்னும் தொடர் சூரியனுக்கும், சோழனுக்கும் பொருந்துவதால் சிலேடையாம். அது `கரத்தான் இரவொழிக்கும்' என்னும் தொடரோடு முடியுங்கால் விரோதமின்றி இருபொருளுக்கும் ஒப்ப அமைதலின் அவிரோதச் சிலேடையாயிற்று(2)'மாதிடத்தான்' என்னும் தொடர் சிவபெருமனுக்கும், சோழனுக்கும் பொருந்துவதால் சிலேடையாம். அது `மன்மதனை மாறழிக்கும்' என்னும் தொடரோடு முடியுங்கால் விரோதமின்றி இரு பொருளுக்கும் ஒப்ப அமைதலின் அவிரோதச் சிலேடை யாயிற்று. (3)'மதி' என்னும் சொல் சந்திரனுக்கும், சோழனுடைய அறிவுக்கும் பொருந்துவதால் சிலேடையாம். அது `குமுதம் அளிக்கும்' என்னும் தொடரோடு முடியுங்கால் விரோதமின்றி இரு பொருளுக்கும் ஒப்ப அமைதலின் அவிரோதச்சிலேடை யாயிற்று. (4)`தனதன்' என்னும் சொல் குபேரனுக்கும், சோழனுக்கும் பொருந்துவதால் சிலேடையாம் அது. `இருநிதிக்கோன்' என்னும் தொடரோடு விரோதமின்றி இருபொருளுக்கும் ஒப்ப முடிதலின் அவிரோதச் சிலேடையாயிற்று.

அவிரோதம்-விரோதம் இன்மை. மாதிடத்தான் என்பதனை மாது+இடத்தான், மா+திடத்தான் எனப் பிரிக்க. மன்மதன் என்பதை மன்மதன் மன்+மதன் எனப் பிரிக்க. மீதாம் அனகம்மேலாய ஆகாயம். மீதாம் அனகன்-மேலாய சோழன். குமுதம் என்பதை மலருக்கு ஆங்கால் ஒரு சொல்லாகக் கொள்க; மகிழ்ச்சிக்கு ஆங்கால் கு - நிலவுலகம், முதம்-மகிழ்ச்சி எனப் பிரித்துப் பொருள் காண்க.

இனி 'இயலும்' என்று ஒழியாது `என்ப' என்ற மிகையான், இவ்வாறன்னிப் பிற வேறுபாட்டான் வருவனவும் கொள்க அவை வந்தவழிக் காண்க.

25. விசேடவணி

78. குணந்தொழில் முதலிய குறைபடு தன்மையின்
மேம்பட ஒருபொருள் விளம்புதல் விசேடம்

எ-ன், நிறுத்த முறையானே விசேடம் என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.