(இ-ள்) குணமும், தொழிலும், சாதியும், பொருளும், உறுப்பும் முதலாயின குறைபடுதல் காரணமாக, ஒரு பொருட்கு மேம்பாடு தோன்ற உரைப்பது விசேடம் என்னும் அலங்காரமாம் எ-று.
அவற்றுள்,
1. குணக்குறை விசேடம்
எ- டு : ' கோட்டம் திருப்புருவங் கொள்ளா அவர்செங்கோல்
கோட்டம் புரிந்த கொடைச்சென்னி - நாட்டம்
சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கம்
சிவந்தன செந்தீத் தெற '
கோட்டம் - வளைதல். திருந்தார் - பகைவர். கலிங்கம் - கலிங்கதேசம். சென்னி - சோழன்.
வி-ரை:, இ- ள் : கொடை நலம் சான்ற சோழனுடைய அழகிய புருவங்கள் கோட்டத்தைக் (வளைவைக்) கொள்ளவில்லை. ஆனால் அதற்குள் அவனுடைய பகைவர்களின் செங்கோல் கோட்டத்தை (கெடுதலை) அடைந்து விட்டன. அச்சோழனுடைய கண்கள் சிவக்கவில்லை; ஆனால் அதற்குள் அவனுடைய பகைவர்களின் கலிங்கநாடு எரியுற்றுச் சிவந்து விட்டன என்பதாம்.
சோழன் பகைவர்மீது சினங்கொள்ளுதற்கு முன்னமேயே அவர்தம் நாடு அழிந்துவிட்டன என்பது கருத்து.
சோழன் தன் பகைவர் நாட்டை அழிக்க வேண்டுமெனில், முதற்கண் அவனுக்குச் சினம் ஏற்பட வேண்டும். அச்சினம் உண்மையை அறிவிக்கும் குணங்களாய கோடுதலும், சிவத்தலும் சோழனுக்கு ஏற்படுவதற்கு முன்னமேயே பகைவர்நாடு அழிந்து விட்டன என்பதால் இது குணக்குறை விசேடமாயிற்று. குணத்தால் குறை விருப்பினும், செயலால் மேம்படுதலின் இது குணக்குறை விசேடமாம்.
2. தொழிற்குறை விசேடம்
எ- டு : ' ஏங்கா முகில்பொழியா நாளும் புனல்தேங்கும்
பூங்கா விரிநாடன் போர்மதமா - நீங்கா
வளைபட்ட தாளணிகள் 1மாறெதிர்ந்தார்க் கந்நாள்
தளைபட்ட தாள்தா மரை '
இ- ள் : இடித்தலைச் செய்து முகில் பொழியாத நாளும் நீர் இரைத்தேறும் காவிரியாற்றை உடைய நாடனுடைய போரில், வலிய யானைகளின் கால்களெல்லாம் கழலாதபடி வளைத்திடப்பட்ட வீரக்கழல் பூண்டன ; இவை இவ்வண்ணம் செய்ய, மாறுபட்ட மன்னவர் கால்களாகிய தாமரைகள் எல்லாம் தளையாகிய விலங்கு பூண்டன எ- று.
' அந்நாள் தளைபட்ட ' என்றது, யானைகளின் கால்கள் வீரக்கழல் பூண்ட அன்றே, பகைவர் தாள்களும் தளைபட்டன எனக் கொள்க.
வி-ரை: மேகம் மழையைச் சொரிதலாகிய தொழிலை நிகழ்த்தினாலன்றி ஆற்றில் தண்ணீர் நிறையாது. யானை முதலிய படைகள் வீரக்கழல்
1. ' மாறெதிர்ந்த தெவ்வர் ' என்பதும் பாடம்.