பூண்டு போரிடுதலாகிய தொழிலை நிகழ்த்தினாலன்றிப் பகைவரைச் சிறையிலடைத்தல் இயலாது. எனினும் இப்பாடற்கண் அவ்வத்தொழில் நிகழும் முன்னமேயே, அவ்வச் செயல்கள் நிகழ்ந்துவிட்டன எனக் கூறுவதால், இது தொழிற்குறை விசேட மாயிற்று.
தொழிற்குறை விசேடம் - தொழிலில் குறையிருப்பினும், செயலால் மேம்பாடு தோன்ற உரைப்பது.
3. சாதிக்குறை விசேடம்
எ- டு: ' மேய நிரைபுரந்து வெண்ணெய் தொடுவுண்ட
ஆயனார் மாறேற்(று) அமர்புரிந்தார் - தூய
பெருந்தருவும் பின்னுங் கொடுத்துடைந்தார் விண்மேற்
புரந்தரனும் வானோரும் போல் '
புரத்தல் - காத்தல். தொடுவுண்டல் - தோண்டியுண்டல். போல் - ஒப்பில் போலி.
வி-ரை:, இ-ள்: பொருந்திய ஆனிரைகளைக் காத்து வெண்ணெயைத் தோண்டி அதனை எடுத்துண்ட இடைக்குலத்தினராய கண்ணபிரான் தேவர்களுடன் எதிர்த்துப் போர் செய்தார். அது பொழுது விண்ணுலகிலுள்ள இந்திரனும் ஏனைய தேவர்களும் அப்போருக்கு ஆற்றாது தூய பாரிசாதம் என்னும் கற்பகத்தருவையும், தமது முதுகையும் கொடுத்தர்கள் என்பதாம்.
முதுகைக் கொடுத்தார் என்றது புறக்கிட்டார் என்றபடி. போல் - உரையசை. கண்ணபிரான் இடைக்குலத்தில் தோன்றினர் என்பதால் சாதிக்குறைவு தோன்றினும், தேவகுலம் அனைத்தையும் வென்றார் என்பதால் மேம்பாடு தோன்றலின் , இது சாதிக்குறை விசேடமாயிற்று.
4. பொருட்குறை விசேடம்
எ-டு : 'தொல்லை மறைதேர் துணைவன்பால் ஆண்டுவரை
எல்லை யிருநாழி நெற்கொண்(டு) ஒர் - மெல்லியலாள்
ஒங்குலகில் வாழும் உயிரனைத்து ஊட்டுமால்
ஏங்கொலிநீர்க் காஞ்சி யிடை '
தொல்லை - பழமை. மறை - வேதம். தேர்தல் - ஒதுதல். துணைவன் - தலைவன். பால் - இடம். மெல்லியலாள் - உமாதேவி. ஆல் - அசை. இடை - இடம்.
வி-ரை:, இ-ள்: மிகுந்த ஒளியைச் செய்யும் நீர்வளம் மிக்க காஞ்சீபுரத்தில், மென்மைத்தன்மை வாய்ந்த ஒப்பற்ற பெருமை யுடைய உமையம்மையார், பழமையான வேதங்களும் அறிதற்கரிய தன்னுடைய தலைவனான சிவபெருமானிடத்தே இருநாழி நெல்லைப்பெற்று அது கொண்டு ஓராண்டு அளவும் உலகுயிர்கள் அனைத்திற்கும் உணவூட்டிப் பாதுகாப்பளாயினள் என்பதாம்.
இப்பாடற்கண் இருநாழி நெற்கொண்டு என்பதால் பொருட் குறைவு தோன்றினும், உயிரனைத்தும் ஊட்டும் என்பதால் மேம்பாடு தோன்ற உரைத்திருத்தலின், அது பொருட்குறை விசேடமாயிற்று.