5. உறுப்புக்குறை விசேடம்
எ-டு : ' யானை இரதம் பரியாள் இவையில்லை
தானும் அனங்கன் தனுக்கரும்பு - தேனார்
மலரைந்தி னால்வென் றடிப்படுத்தான் மாரன்
உலகங்கள் மூன்றும் ஒருங்கு '
இரதம் - தேர். பரி- குதிரை. ஒருங்கு - ஒருபடித்தாக.
வி-ரை:, இ-ள்: மன்மதனுக்கு யானை, தேர், குதிரை, காலாள் ஆகிய நால்வகைப் படைகளும் இல்லை. அவனும் உடம்பு இல்லாதவன். அவனுடைய வில்லோ வலிமையற்ற கரும்பு. அங்ஙனம் இருந்தும் தேன் நிறைந்த ஐந்து மலர்களினாலேயே மூவுலகையும் ஒருங்கே வென்று அடிப்படுத்தினான் என்பதாம்.
மலர் ஐந்து - தாமரை, முல்லை, கருவிளை, மாம்பூ, அசோகம் என்பன.
உலகம் மூன்றையும் ஒருங்கு அடிப்படுத்தற்கான உறுப்புகள் ஒன்றும் இல்லாத குறையிருப்பினும், அவற்றை வென்று அடிப்படுத்தான் என மேம்பாடு கூறினமையின் இது உறுப்புக்குறை விசேடமாயிற்று.
பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.
(52)
26. ஒப்புமைக் கூட்டவணி
79. கருதிய குணத்தின் மிகுபொருள் உடன்வைத்(து)
ஒருபொருள் உரைப்ப(து) ஒப்புமைக் கூட்டம்.
எ-ன், நிறுத்த முறையானே ஒப்புமைக் கூட்டம் என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) ஒரு பொருளைச் சொல்லுமிடத்துத் தான் கருதிய குண முதலாயினவற்றின் மிக்க பொருளைக் கூடவைத்துச் சொல்லுவது ஒப்புமைக் கூட்டம் என்னும் அலங்காரமாம் எ- று.
(53)
அதன் விரி
80. புகழினும் பழிப்பினும் புலப்படும் அதுவே.
எ-ன், அவ்வலங்காரத்தை விரித்து உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்)அவ்வொப்புமைக் கூட்டம் என்னும் அலங்காரம், ஒன்றனைப் புகழ்தற்கண்ணும், பழித்தற்கண்ணும் தோன்றும் எ-று.
அவற்றுள்,
1. புகழ் ஒப்புமைக்கூட்டம்
எ- டு; 'பூண்தாங்கு கொங்கை பொரவே குழைபொருப்பும்
தூண்டாத தெய்வச் சுடர்விளக்கும் - நாண்தாங்கு
வண்மைசால் சான்றவரும் 1காஞ்சி வளம்பதியின்
உண்மையால் உண்டிவ் வுலகு '
'பூண்தாங்கு கொங்கை ' பொரவே ' என்பது உமாதேவியினுடைய அணிந்த அணிகலங்களையுடைய முலை பொரவே என்றவாறு. 'குழை
1. 'காஞ்சி வண்பதியும் ' என்பதும் பாடம்.