பக்கம் எண் :
 
160தண்டியலங்காரம்

வி-ரை, இ-ள்: அழகிய கருமையான யானைத் தோலையும், வெள்ளிய திருநீற்றையும், சிவந்த திருமேனியையும், பசுமையான கொன்றை மாலையையும் உடைய சிவபெருமானைச், சிதம்பரத்தில் காலை,மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் கைகளைக் கூப்பித், திருவடிகளைத் தொழுதால் முற்செய்த வினைகள் யாவும் கீழ்மைப்படும் (வினைகள் சிறிது சிறிதாகக் குறைந்து நீங்கிவிடும்) என்பதாம்.

இப்பாடற்கண் காலை,மாலை ; கைகூப்புதல், கால் தொழுதல்; மேல் கீழ்; கருமை, வெண்மை; செம்மை, பசுமை என்ற சொற்கள் ஒன்றோடொன்று மாறுபட்டு விரோதப்பட இருத்தலின், இது சொல் விரோதமாயிற்று.


2. பொருள் விரோதம்

எ-டு: 'சோலை பயிலுங் குயில்மழலை சோர்ந்தடங்க
ஆலும் மயிலினங்கள் ஆர்த்தெழுந்த - ஞாலம்
குளிர்ந்த முகில்கறுத்த கோபஞ் சிவந்த
விளர்ந்த துணைபிரிந்தார். மெய்'

விளர்த்தல்-வெளுத்தல்.

வி-ரை,இ-ள்: சோலைகளிற் பொருந்திய குயில்களின் அழகிய சொற்கள் சோர்வுற்று அடங்க, ஆடுகின்ற மயில் கூட்டங்கள் ஆர்த்து எழுந்தன; நிலம் குளிர்தற்குக் காரணமான மேகங்கள் கறுத்தன; இந்திர கோபம் என்னும் பட்டுப்பூச்சிகள் சிவந்தன; தம் துணைவரைப் பிரிந்த
மகளிரின் உடல்கள் வெளுத்தன என்பதாம்.

இது கார்கால வருணனை ஆகும். இப்பாடற்கண் முன் இரண்டடிகளில் பொருள் விரோதம் அமைந்துள்ளது. குயில் மழலை சோர்ந்தடங்கலும், மயிலினங்கள் ஆர்த்து எழுதலும் ஒன்றற்கொன்று மாறுபட்ட பொருள் ஆதலின் பொருள் விரோதமாம். பின் இரண்டடிகளில் கறுப்பு, சிவப்பு, வெளுப்பு என்ற சொற்கள் ஒன்றற்கொன்று மாறுபட்டிருத்தலின் சொல் விரோதமும் அமைந்துள்ளது.

இனி, இவ்வலங்காரம் பிற அலங்காரங்களோடு கூடியும் வரும்.


சிலேடை விரோதம்

எ-டு: 'இனமான் இகல வெளிய வெனினும்
வனமேவு புண்டரிகம் வாட்டும்-வனமார்
கரியுருவங் கொண்டும் 1அரிசிதறக் காயும்
லிரிமலர்மென் கூந்தல் விழி'

இ-ள்: இனமாயுள்ள மான்கள் மாறுபடுதற்கு எளிவந்தும் காட்டுள் வாழும் புலிகளை வருத்த வல்லவாயின; காட்டுயானை தன் வடிவைக் கொண்டும் சிங்கம் இரிந்தோடக் காயா நின்றன எனவும்; இனிக் கண்களின் மேல் செல்லுங்கால், இனமாயுள்ள மான்விழி போன்று வெண்மையை உடையவாய் நீருடனே பொருந்திய கமல மலரை அழகழித்து, அழகமர்ந்தமை மதர்ப்புடையவாய் அரிசிதற வெம்மை செய்ய வல்லன, விரிந்த மலரையுடைய மெல்லிய கூந்தலையுடைய இவளுடைய விழிகள். எ-று


1 . 'அரிசிதறிக் காட்டும்' என்பதும் பாடம்.