பக்கம் எண் :
 
பொருளணியியல்161

இது சிலேடை விரோதம். இகலுதல்-பகைத்தலும், ஒத்தலும். வெளிய-எளிய, வெளிய. வனம்-காடும், நீரும். புண்டரிகம்-புலியும், தாமரையும். வனம்-காடும், அழகும். கரி-யானையும், மையும். அரி-சிங்கமும், செவ்வரியும். சிதறல்- அழித்தலும், பரத்தலும். காய்தல்-கோபித்தலும், வருத்தலும்.

பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

வி-ரை: சிலேடை அணியுடன், விரோதஅணி கூடிவரின் அது சிலேடை விரோதமாம்.

மான் எளிய எனினும் புலியை வாட்டும் என்பதும், யானை தன் வடிவைக் கொண்டும் சிங்கம் பயந்தோடுமாறு காயும் என்பதும் இப்பாடற் கண் காணப்படும் பொருள் விரோதம் ஆகும். இப்பாடற்கண் அமைந்த சொற்கள் பலவும் சிலேடைப் பொருள்பட அமைந்துள்ளமையின் சிலேடையுமாயிற்று. இவ்வாற்றான் இது சிலேடை விரோதமாயிற்று.

28. மாறுபடுபுகழ் நிலையணி

82. கருதிய பொருள்தொகுத்(து) ஆங்கது பழித்தற்கு
வேறொன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை.

எ-ன். நிறுத்தமுறையானே மாறுபடு புகழ்நிலை என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: கவி, தான் கருதிய பொருளை மறைத்து அதனைப் பழித்தற்கு வேறொன்றனைப் புகழ்வது மாறுபடு புகழ்நிலை என்னும் அலங்காரமாம்எ-று.

எ-டு: 'இரவறியா யாவரையும் பின்செல்லா நல்ல
தருநிழலும் தண்ணீரும் புல்லும் - ஒருவர்.
படைத்தனவும் கொள்ளாவிப் புள்ளிமான் பார்மேல்.
துடைத்தனவே யன்றோ துயர்.

இரப்பவனைப் பழித்தற்கு மானைப் புகழ்ந்தது. இரவு-இரத்தல். பின் செல்லல்-குறையுறுதல். துடைத்தல்-நீக்குதல்.

வி-ரை,இ-ள்: இந்தப் புள்ளிமான்கள் பிறரிடம் சென்று இரத்தலை அறியமாட்டா, எவரிடத்தும் குறையுற்றுச் செல்லமாட்டா, ஒருவரால் ஈட்டப்படாத நல்ல மரத்தின் நிழலையும், குளிர்ந்த நீரையும், புல்லையுமே தங்கும் இடமும், உணவுமாகக் கொள்ளும்; ஆதலின் இவை இவ்வுலகில் துன்பத்தினின்றும் நீங்கியனவன்றோ? என்பதாம்.

இப்பாடற்கண் கவிஞன் பழிக்கக் கருதிய பொருள் இரவலரை யாகும். ஆனால் அதனை மறைத்து மானைப் புகழ்ந்திருப்பதால், இது மாறுபடு புகழ்நிலை யாயிற்று.

எ-டு: 'போதுந் தளிரும் புனைந்து மணம்புணர்ந்து
சூதப் பணைதழுவித் தோன்றுமால் - மாதே
பலமா தவங்கள் பயின்றதோ பண்(டு) இக்
குலமா தவியின் கொடி.

என்பதும் அது.

இ-ள்: இந்தச் சிறந்த மாதவிக் கொடி பூவினாலும் தளிரினாலும் அலங்கரிக்கப்பட்டு மணக்கோலத்தையும் உடையராய் மணஞ்செய்து.