வி-ரை,இ-ள்: கடலும் மலையும் போலக் கரிய நிறம் உடையவனே ! அல்லது அவைபோல உயர்ந்த தோற்றம் உடையவனே ! என்பதாம் .
திருமாலின் நிறத்திற்குக் கடல் , மலை ஆகியவற்றின் கருமையை எடுத்துக் கூறியிருத்தலின் , இது பொருளுக்கேற்ற உவமை யாயிற்று . திருமாலின் பெருமைக்கேற்ப மலையும் , கடலும் கூறப்பட்டிருத்தல் பொருள் பற்றியதாம் .
4. பண்பிற்கேற்றது
எ-டு : ' புலிநா வன்ன புல்லிதழ்த் தாமரை' என்பது .
வி-ரை,5. சாதிக்கேற்றது
எ-டு : ' சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ்
நூற்றிதழ் அலரின் நிரைகண் டன்ன
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை '
- புறம் . 27
எனவும் ,
'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ(டு) ஏனை யவர் '
- குறள். 410
எனவும் வரும் .
வி-ரை: 'சேற்றுவளர் .. காலை ' என்பதன் பொருள் ; சேற்றிலே தோன்றிய சிறந்த நிறத்தையுடைய நூறு இதழ்களையுடைய தாமரை மலர்களை வரிசையாகக் கண்டாற் போல , உயர்வு தாழ்வு இன்றி விழுமிய அரசர் குடியிற் பிறந்த அரசாண்ட அரசர்களை எண்ணும்பொழுது என்பதாம் .
இப்பகுதியில் சிறந்த அரச சாதிக் கேற்பச் , சிறந்த நூற்றிதழ்த் தாமரைகளை உவமை கூறியிருத்தலின் , இது சாதிக்கேற்ற உவமை யாயிற்று .
'விலங்கொடு ..... யவர்' என்பதன் பொருள் : விலங்கை நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் , அத்துணைத் தீமையுடையர் விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர் என்பதாம் .
இதன்கண் கல்லாத மனித சாதிக்குக் (இனத்திற்குக்) கல்லாத விலங்கு சாதியை உவமை கூறியுள்ளமையின் , இது சாதிக்கேற்ற உவமை யாயிற்று .
6. மரபிற்கேற்றது
எ-டு : ' கவிர் போலுஞ் செவ்வாய்' எனவும் , 'பவளம் போலுஞ் செவ்வாய்' எனவும் வரும் ; இவை செம்பருத்தியும் கரவீரமும் உரையாமையின் .
வி-ரை: வாயின் சிவப்பிற்கு முருக்கிதழ் , பவளம் ஆகியவைகளை உவமை கூறுதல் மரபாதலின் , இவை மரபிற்கு ஏற்ற உவமையாயின .
கவிர் - முருக்கிதழ் . இங்ஙனமன்றி செம்மைநிறம் மைபற்றி செவ்வலரி , செம்பருத்தி போன்றவைகளை வாயின் சிவப்பிற்கு உவமை கூறல் மரபன்றாம் .