பக்கம் எண் :
 
172தண்டியலங்காரம்

பிற அலங்காரங்கட்கும் இவ்வாறே ஏற்புடைமை அறிந்து பாடுவன சிறப்புடைய எனக் கொள்க.

அல்லதூஉம், பண்பு தொழில் பயன் என்பனவற்றின்மேல் நிகழும் சொல்லின்றி அவற்றிற்கு முதலாகிய பொருள் கூறவே, அவ்வாற்றாற் பண்பு முதலாயின பெறப்படும் உவமையும் உள. அவை வருமாறு:-

எ-டு: 'மயில்போல் மடப்பிடிபோல் மான்போல் மழலைக்
குயில்போல் ஒளிர்மென் கொடிபோல் - பயிலும்
கொலைவா ரணத்துங்கன் கோழிக்கோன் கொல்லி
மலைவாணர் காதல் மகள்'

இதனுள், மயில்போலும் இயலினை யுடையாள் எனவும், பிடிநடை போலும் நடையினை யுடையாள் எனவும், மான் நோக்குப்போலும் நோக்கினையுடையாள் எனவும், குயில் மொழி போலும் மொழியினை யுடையாள் எனவும் கொள்ளக் கிடந்தமை அறிந்து கொள்க. என்னை?

'சுட்டிக் கூறா வுவமை யாயின்
பொருளெதிர் புணர்த்துப் பொருந்துவ கொளலே'

- தொல். பொருள். 278

என்பவாகலின்.

வி-ரை, இ-ள்: பகைவரைக் கொல்லுதற்குரிய யானைப் படையால் சிறந்தவனும், உறையூருக்குத் தலைவனும் ஆன சோழனுடைய கொல்லிமலையில் வாழும் வேடுவரின் பெண், மயில் போன்றும், இளமை பொருந்திய பெண் யானை போன்றும், மானைப் போன்றும், மழலையுடைய குயில் போன்றும், விளங்குகின்ற மெல்லிய கொடி போன்றும் பயிலுவாள் என்பதாம்.

வேட்டுவப் பெண்ணிற்கு மயில், மடப்பிடி, குயில், கொடி ஆகிய நான்கு பொருள்களையும் உவமை கூறியிருப்பினும், இன்ன இன்ன காரணங்களால் இவை உவமை யாயின என்று கூறாதிருத்தலின் இவையனைத்தும் சுட்டிக்கூறாவுவமை யாயின. சுட்டிக்கூறாவுவமை - பொருளுக்கும் உவமைக்கும் இன்ன வகையால் ஒப்புமை என்பதைக் குறித்துச் சொல்லாத உவமை. இங்ஙனம் இருப்பனவற்றைப் படிப்பவர்கள் தான் பொருளையும் உவமையையும் ஒருங்கு நிறுத்தி இன்னதால் இது உவமையாயிற்று என அறிந்து கொள்ளவேண்டும் என்பது 'சுட்டிக்கூறா' என்ற நூற்பாவின் பொருளாகும்.

பெண்ணிற்கு மயில், பிடி, குயில், கொடி என்பன எவ்வகையில் உவமையாயின என்பதை உரையாசிரியரே மேல் விளக்கியிருத்தல் காண்க.

(63)

35. பாவிகவணி


90. பாவிகம் என்பது காப்பியப் பண்பே.

எ-ன், நிறுத்த முறையானே பாவிகம் என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: பாவிகம் என்று சொல்லப்படுகிறது பொருள் தொடர்நிலைச் செய்யுள் திறத்துக் கவியால் கருதிச் செய்யப்படுவதொரு குணம் எ-று.