பக்கம் எண் :
 
பொருளணியியல்173

அஃது, அத்தொடர்நிலைச் செய்யுள் முழுதும் நோக்கிக் கொள்ளப்படுவதல்லது, தனித்து ஒரு பாட்டால் நோக்கிக் கொள்ளப் புலப்படாதது.

எ-டு: 'பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப
பொறையிற் சிறந்த கவசம் இல்லை
வாய்மையிற் கடியதோர் வாளி யில்லை'

'என்பது போலக் கிடப்பது.'

அஃதேல், முன் அதிகாரச் சூத்திரத்துப் பிற அலங்காரங்களுடன் வைத்த இதனை, ஈண்டுப் புறனடையின் பின்னாக வைத்தது என்னை? யெனின், பிற அலங்காரங்கள் ஒரு பாட்டானே உணரப் புலப்படும்; இஃது அன்னதன்று ஆகலான்.

ஆசிரியன் வாழ்த்து என்னும் அலங்காரத்தின் பின்னரே 1விரவியல் வைத்தது, முன்னரளவே விரவுவன என்பது அறிவித்தற்கும்; இஃது அன்னது அன்று என்பதற்கும், வேறாகத் தனித்து இலக்கியப் பாட்டு இன்று என்பது அறிவித்தற்கும் என்க.

வி-ரை: 'பிறனில் விழைவோர் கிளையொடும் கெடுப' என்பது இராமாயணத்திலிருந்து அறியப்படுவதாகும். 'பொறையிற் சிறந்த கவசம் இல்லை' என்பது பாரதத்தால் அறியப்படுவதாகும். 'வாய்மையிற் கடியதோர் வாளியில்லை' என்பது அரிச்சந்திர புராணத்தால் அறியப்படுவதாகும்.

இதுகாறும் ஒரு பாடலைக் கொண்டு அணி கூறப்பட்டது. இவ்வணியோ ஒரு நூலைக்கொண்டு கூறப்படுவதாகும்.

இலக்கணம் அனைத்தும் கூறிப் புறனடை கூறலே மரபு. அங்ஙனமிருக்கப் புறனடையின் (89) பின்னாக இவ்வணியைக் கூறியது, முன்னர்க் கூறப்பட்ட அணிகள் எல்லாம் ஒவ்வொரு பாடலைக் கொண்டே கூறப்படும்; இஃது அன்னதன்றி ஒரு நூலைக் கொண்டே கூறப்படும் என்பதைப் பெறுவதற்கேயாம்.

அடுத்துச் சங்கீரண அணி(விரவியல்)யின் பின்னாக இதனை வைத்ததற்குக் காரணம் கூறுகின்றார் உரையாசிரியர். அதற்கு அவர் தரும் காரணம் இரண்டு. (1) சங்கீரண அணி ஒருபாட்டைக் கொண்டே கூறப்படுவதா யிருப்பினும் அவ்வொரு பாட்டில் பல அணிகள் இருக்கும். இப்பாவிக அணியோ ஒரு நூலைக் கொண்டே கூறப்படுதலின், அந்நூலின்கண் பெரும்பாலும் எல்லா அணிகளும் விரவியிருக்கும் என்பதை அறிவிக்கவாம் என்பது. சங்கீரண அணியில் இரண்டிற்கு மேற்பட்ட பல அணிகள் வரினும், ஒரு நூலையே நோக்க, ஒரு பாடலில் வரும் அணிகள் குறைவாகவே இருக்கும் என்பது கருத்து. (2) சங்கீரண அணியைத் தனித்த பாடல் கொண்டு விளக்கலாம். ஆனால் இதனையோ ஒரு நூலைக் கொண்டு விளக்க முடியுமேயன்றித் தனித்த பாடல் கொண்டு விளக்க முடியாது. ஆதலின் இதற்குத் தனித்த இலக்கிய மேற்கோள் இல்லை என்பது.

சங்கீரண அணி எனினும் விரவியல் எனினும் ஒக்கும். (64)


1. 'சங்கீரணம் வைத்தது' என்பதும் பாடம்.