பக்கம் எண் :
 
186தண்டியலங்காரம்

சூழும் சங்குகளால் தரப்பட்ட முத்துக்களையுடைய கடலே! எ - று.

இதில் 'கொண்டல் கொண்டலர்' என்று முதலடி முதலிலும், 'பண்ணையாய்ப் பண்ணையாய்' என இடையிலும், 'வண்டல் வண்டலர்' என இரண்டாமடி முதலிலும், 'மண மணன்' என இடையிலும், 'கண்டல் கண்டக' என மூன்றாமடி முதலிலும், 'துறை துறை' என இடையிலும், 'மண்டல் மண்டல' என நான்காமடி முதலிலும், 'வளைதரு வளைதரு' என இடையிலும் மடக்குகள் வந்தமை காண்க.

ஒழிந்த ஆதியோடிடை மடக்கு வந்தவழிக் கண்டு கொள்க.

(வி - ரை)இது வண்டலயரும் பெண்கள் கடலை நோக்கிக் கூறியதாகும். கொண்டல் - கீழ்க்காற்று. கொண்டு அலர் - மோத அலர்கின்ற. பண்ணை ஆய் - இசையை ஆராய்கின்ற. பண்ணை - விளையாட்டு; 'பண்ணைத் தோன்றிய' (தொல் - மெய்ப் - 1) என்றவிடத்தும் இது இப்பொருளாதல் அறிக. ஆயம் - கூட்டம். வண்டல் - வண்டல் கொண்டிழைத்த சிற்றில். வண்டு அலர் - வண்டுகள் அரற்றிய. மணம் மணல் முன்றில் எனப்பிரித்துப் பொருள் காண்க. கண்டல் - கைதை; தாழை. கண்தக -கண்குளிரும்படி. ஓதிமம் கலந்து உறை துறை எனப் பிரித்துப் பொருள் காண்க. மண்டல் - ஏறாதொழிவாயாக; அல்லீற்று எதிர்மறை. மண்டலம் - நிலவலயம். வளைதரு - சூழ்ந்த; வளை தரு - சங்குகளால் தரப்பெற்ற.

ஒழிந்த ஆதியோடு இடைமடக்காவன: - ஓரடி ஆதியோடிடை மடக்கு நான்கும், ஈரடி ஆதியோடிடை மடக்கு ஆறும், மூவடி ஆதியோடிடை மடக்கு நான்குமாம்.

முதற்கண்ணும் இறுதிக்கண்ணும் முற்றுமடக்கு

எ - டு :

'நிரையா நிரையா மணிபோல்நிறை கோடல் கோடல் 

வரையா வரையா மிருள்முன்வரு மாலை மாலை 

விரையா விரையா வெழுமின்னொளி மேக மேகம் 

உரையா உரையா ரினுமொல்லன முல்லை முல்லை'

 இ - ள் ; ஆனிரைகளின் ஒழுங்கா ஒலிக்கும் மணியோசை போல எங்கள் நிறையைக் கவராதே காந்தளே! அளவிடவரிய அரையாம இருளுக்கு முன்னே வரும் மயக்கத்தைச் செய்யும் மாலையானது வரும்; மற்றும் கடுகி இரைந்து மின்னொளியை யுடைத்தாய் மேகங்களும் எழும்; முல்லை நிலத்துள்ள முல்லைக் கொடிகளும் ஒன்றுஞ் சொல்லாத புகழுடைய தலைவரினும் பகையாயின எ - று.

இதில் 'நிரையா நிரையா', 'கோடல் கோடல்' என முதலடி முதற்கண்ணும் இறுதிக்கண்ணும், 'வரையா வரையா', 'மாலை மாலை' என இரண்டாமடி முதற்கண்ணும் இறுதிக்கண்ணும், 'விரையா விரையா', 'மேக மேக' என மூன்றாமடி முதற்கண்ணும் இறுதிக்கண்ணும், 'உரையா உரையா', 'முல்லை முல்லை' என நான்காமடி முதற்கண்ணும் இறுதிக்கண்ணும் மடக்குகள் வந்தமை காண்க.

ஒழிந்த ஆதியோடு கடை மடக்கு வந்தவழிக் கண்டு கொள்க.