'சலமேதோ? சங்கந்தா பூணாரந் தாமே கலைதா?நற் புங்கவன்மால் காணாப் - புலவுடைய கங்கரா! கோணா கலாமதிசேர் கோடீர! சங்கரா! சோணா சலசா!' எனவும் மூன்று வெண்பாவாய்த் திரிபங்கியானது காண்க. இவற்றிற்கும் முதல் வெண்பாவின் பொருளே அமையும். இது, ஒரு செய்யுளே மூன்று பங்காவதால் திரிபங்கி எனப்பட்டது. (வி - ரை) திரி - மூன்று, பங்கி - பங்கத்தை (வேறுபாட்டை) யுடையது, ஒரு செய்யுள் மூன்று வகையாகப் பிரிதலின், இது இப்பெயர்பெற்றது. இதற்குக் காட்டப்பட்ட இருபாடல்களுள் முன்னையது ('ஆதரந்தீர்') மூன்று பாடல்களாகப் பிரிந்துள்ளன. அடுத்துள்ள பாடல் ('சங்கந்தா') இரண்டு வெண்பாக்களாகவே பிரிந்துள்ளன. எனினும் உரையில், 'மூன்று வெண்பாவாய்த் திரிபங்கியானது காண்க' எனக் காணப்படுகின்றது. 'சங்கந்தா' என்று தொடங்கும் பாடலமைப்புடன், அதனின்றும் பிரிந்த இரண்டு வெண்பாக்களையும் கூட்ட மூன்றாதல் பற்றி இங்ஙனம் கூறப்பட்டது என அறிக. முன்னையதில் ('ஆதரந்தீர்') முதற்கண் உள்ள பாடலமைப்பின் வேறாகவே மூன்று உள்ளது. பின்னையதில் காட்டப்பட்ட பாடலையும் கூட்டவே மூன்றாக அமைகிறது. (20) பிறிதுபடுபாட்டு என்பது, ஒரு செய்யுளை அடியும் தொடையும் வேறுபடுப்பச், சொல்லும் பொருளும் வேறுபடாது வேறொரு செய்யுளாய் முடிவது. எ - டு : | 'தெரிவருங் காதலிற் சேர்ந்தோர் விழையும் பரிசுகொண்டு | | வரியளி பாட மருவரு வல்லி யிடையுடைத்தாய்த் | | திரிதருங் காமர் மயிலிய லாயநண் ணாத்தேமொழி | | யரிவைதன் னேரென லாகுமெம் மைய!யா மாடிடமே' |
இ - ள் : எம் ஐயனே! யாம் விளையாடும் இவ்விடமானது, தெரிதற்கரிய காதலினாலே கூடியவர் விரும்பும் விதத்தைக் கொண்டு, இசைப்பாட்டையுடைய வண்டுகள் என்னும் பாடல் மகளிர் பாடுதலைச் செய்ய, மருவுதற்கரிய கொடிகளாகிய இடையினை யுடைத்தாய்த், திரிகின்ற அழகிய மயில்கள் என்னும் தோழியர் கூட்டத்தைப் பொருந்தி, தேன் போலும் மொழியினையுடைய அரிவைக்கு ஒப்பாகும் என்று சொல்லலாந் தகைமைத்து எ - று. இச்செய்யுளை அடியும் தொடையும் வேறுபடுப்ப, 'தெரிவருங் காதலிற் சேர்ந்தோர் விழையும் பரிசு கொண்டு வரியளி பாட மருவரு வல்லி யிடையுடைத் தாய்த்திரி தருங்காமர் மயிலிய லாய நண்ணாத் தேமொழி யரிவைதன் னேரென லாகுமெம் மைய யாமா டிடமே'
|