பக்கம் எண் :
 
சொல்லணியியல்227

என ஆறடியாய், ஈற்றயலடி முச்சீராய், ஏனையடி நாற்சீராய் வந்து 'நேரிசை ஆசிரியப்பா' ஆமாறு காண்க.

இனித் திரிபங்கிக்குச் சொன்ன பாட்டையே, இரண்டு பாட்டாகக் கூட்டி அடி தொடை பேதித்துச் சொல்லலுமாம்.

(வி - ரை) திரிபங்கியும், பிறிதுபடுபாட்டு எனக் கூறத்தகுமேனும் இவ்விரண்டற்கும் வேற்றுமையுண்டு. திரிபங்கியாவது அதற்குக் காட்டப்பட்ட பாடலிலிருந்து மூன்று பாட்டாகப் பிரிவதும், காட்டப்பட்ட பாடலிலிருந்து இரண்டு பாடல்கள் பிரிந்து அக்காட்டப்பட்ட பாடலுடன் கூட்ட மூன்றாக ஆதலும் ஆகிய இயல்பை யுடையது. பிறிதுபடுபாட்டிலோ காட்டப்பட்ட பாடலிலிருந்து பிரியும் பாட்டு ஒன்றாகவே இருத்தலாகிய இயல்பினையுடையது. இவை தம்முள் வேற்றுமை.

திரிபங்கிக்குச் சொன்ன பாடலை, இருபாடலாக அடி தொடை வேறுபடுத்திக் காட்டப் பின்வருமாறு வரும்.

'ஆத ரந்தீர்
மாது பங்கா!
ஏத முய்ந்தார்
ஓது மொன்றே!'

இது வஞ்சித்துறை.

'அன்னைபோ லினியாய்! அம்பிகா பதியே!
வன்னிசேர் சடையாய்! வம்புநீண் முடியாய்!
இன்னல்சூழ் வினைதீர் எம்பிரா னினியார்
உன்னுவா ரமுதே! உம்பர்நா யகனே!'

இது கலிவிருத்தம்.

(7)

சித்திரகவி முற்றிற்று.

வழுக்கள் மலைவுகள்

98.

பிரிபொருட் சொற்றொடர் மாறுபடு பொருண்மொழி

மொழிந்தது மொழிவே கவர்படு பொருண்மொழி

நிரனிறை வழுவே சொல்வழு யதிவழு

செய்யுள் வழுவொடு சந்தி வழுவென

எய்திய ஒன்பதும் இடனே காலம்

கலையே உலகம் நியாயம் ஆகம

மலைவும்உள் ளுறுத்தவும் வரைந்தனர் புலவர்.

எ - ன், முன் ஓதப்பட்ட அணிபெறும் செய்யுள்கட்குப் பொருந்தாத வழுவாவன இவை என்று தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : அவை. பிரிபொருட் சொற்றொடரும், மாறுபடு பொருண்மொழியும், மொழிந்தது மொழிதலும், கவர்படு பொருண்மொழியும், நிரனிறை வழுவும், சொல் வழுவும், யதி வழுவும், செய்யுள் வழுவும், சந்தி வழுவும் என்னும் ஒன்பது வழுவும்; இடமலைவும், கால மலைவும் கலைமலைவும், உலகமலைவும், நியாய மலைவும், ஆகம மலைவும் என்னும் ஆறுமலைவும் உள்ளிட்ட பதினைந்தும் செய்யுளிடத்து வரைந்தனர் புலவர் எ - று.