முன்னர் ஒன்பது வழுவும், பின்னர் ஆறு மலைவும் என இவ்வாறு வைத்தது என்னை? எனின், முன்னர் ஒன்பது வழுவும் குற்றமாதல் பெரும்பான்மைய, குணமாதல் சிறுபான்மைய என்றற்கும்; பின்னர் ஆறு மலைவும், ஒருதலையாகவே குற்றமாய்ப் புகழ்ச்சியிடத்துப் புனைந்துரையாகப் புணர்க்கத்தக்க புலவரால் மொழியப்படும் சிறுபான்மைய என்றற்கும் இவ்வாறு வைத்தது என்றறிக. அஃதேல், குற்றம் செய்யுள் நோக்கி வருவனவல்லவோ ஆதலால், செய்யுட்கு இலக்கணம் கூறும் யாப்பு நூலுள் அன்றேயுணர்த்துவது, ஈண்டு உரைத்தது என்னை? எனின், செய்யுள் என்பது சட்டகம்; அலங்காரம் என்பது அச்சட்டகத்தைப் பொலிவு செய்வது; ஆதலால் செய்யுட்குப் பொலிவு ஈண்டு உரைக்கப்பட்டது. இக்குற்றம் அச்செய்யுட்குப் பொலிவழிவு செய்வன ஆதலால், அச்செய்யுட்குப் பொலிவழிவு வாராமல் புணர்க்க வேண்டுமென ஈண்டே யுணர்த்தப்படும்; ஆதலால், பிறிதெடுத்தல் அன்றென்க. அஃதேல், இச்சூத்திரத்துள் செய்யுள் என்பது பெற்றிலமால் எனின், மேல் பொதுவியலுள் அதிகரித்த செய்யுட்கன்றே அலங்காரம் உணர்த்தியது, ஆதலால் இக்குற்றமும் அச்செய்யுட்கண் வாராமல் புணர்க்க வேண்டும் என்றே கொள்ளப்படும். அல்லதூஉம், இச்சூத்திரத்துள் 'சொற்றொடர்' என்றது அச்செய்யுளையேயன்றோ என்க. (8) பிறன்கோள் கூறி மறுத்தல் 99. | மேற்கோள் ஏது எடுத்துக் காட்டென | | ஆற்றுளி கிளக்கும் அவற்றது வழுநிலை | | நிரம்ப வுணர்த்த வரம்பில வென்ப. |
எ - ன், பிறன்கோள் கூறி மறுக்கின்றது. இ - ள் : மேற்கோளும், ஏதுவும், எடுத்துக்காட்டும் என முறையால் சொல்லப்படும் அவற்றது வழுநிலையை ஈண்டு முற்றவுணர்த்த அளவிலவாதலால் கூறிற்றிலவென்று சொல்லுவர் எ - று. மேற்கோள் முதலிய மூன்றும் நியாயநூலுள் சொல்லப்படும். அவைதாமும் மதங்கள்தோறும் வேறுபட்டு வருவன வாதலால், இன்பந்தர வுரைக்கும் இவ்வலங்கார இலக்கணத்தின்கண், மொழியின், இன்பம் அழிந்து பிறிதெடுத்து விரித்தல் என்பதாகும் ஆதலால், ஈண்டு வேண்டிற்றிலர். (9) (1) பிரிபொருட் சொற்றொடர் 100. | அவற்றுள் | | பிரிபொருட் சொற்றொடர் செய்யுள் முழுவதும் | | ஒருபொருள் பயவா(து) ஒரீஇத் தோன்றும். |
எ - ன், நிறுத்த முறையானே பிரிபொருட் சொற்றொடர் என்னும் வழுவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள் : அவற்றுள், பிரிபொருட் சொற்றொடர் என்பது, செய்யுள் முழுவதும் கூட்டி நோக்க ஒரு பொருளாக உணரப்படாது, தனித்தனி நோக்கப் பொருள் தோன்றுவது எ- று.
|