பக்கம் எண் :
 
சொல்லணியியல்229

பிரிபொருள் - ஒன்றாத பொருள்; சொற்றொடர் - செய்யுள்; ஆதலால் ஒன்றாப் பொருளுடைச் செய்யுள். அஃதாவது, வாக்கியங்களை வெவ்வேறு நோக்கப் பொருளுடையவாய்க், கூட்டி நோக்க ஒரு பொருளாக உணரப்படாததாய் வருவது.

எ - டு : 

'கொண்டல் மிசைமுழங்கக் கோபம் பரந்தனவால்

தெண்டிரைநீ ரெல்லாம் திருமுனியே - உண்டுமிழ்ந்தான்

வஞ்சியார் கோமான் வரவொழிக மற்றிவளோர்

பஞ்சியார் செஞ்சீ றடி'

இ - ள் : இதனுள், வானின்கண் மேகங்கள் முழங்க நிலத்தின்கண் இந்திர கோபம் பரந்தன எனவும்; தெளிந்த அலைகளையுடைய கடல் நீரையெல்லாம் அகத்திய முனியே உண்டு உமிழ்ந்தான் எனவும்; கருவூராருக்குக் கோமானாகிய சோழனே வருதலை ஒழிவாயாக எனவும்; இவள் செம்பஞ்சியை யூட்டிய சிவந்த சிற்றடியாள் எனவும்; தனித்தனி நோக்கப் பொருள் பயந்து, கூட்டி நோக்கப்பொருள் பயவாமையின் அப்பெயராயினவாறு காண்க.

(10)

மேலதற்கோர் சிறப்புவிதி

101. களியினும் பித்தினும் கடிவரை யின்றே.

எ - ன், எய்தியது இகந்துபடாமல் காத்தல் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : மேல் மொழிந்த பிரிபொருட் சொற்றொடர், கள்ளுண்டு களித்தான் கூற்றின்கண்ணும், பித்தினால் மயங்கினான் கூற்றின்கண்ணும் கடிந்து நீக்கப்படாது எ - று.

அவற்றுள், களியான் மொழிந்தது

எ - டு :

'காமர் உருவங் கலந்தேன்யான் காங்கேயன்

வீமனெதிர் நின்று விலக்குமோ? - தாமரைமேல்

மால்பொழிய வந்தார் அருகர் மதுவுடனே

பால்பொழியும் இவ்வூர்ப் பனை'

இ - ள் : இதனுள், அழகிய உருவங்களிலே யான் புக்குக் கலந்தேன் எனவும்; காங்கேயனாகிய அரசன் வீமன் எதிர் நின்று போரை விலக்குமோ? எனவும்; தாமரை மலர்மேல் அருகர் 1மால் பொழிய வந்தார் எனவும்; இவ்வூர்ப்பனை மதுவுடனே பாலைப்பொழியும் எனவும் பொருள் பயந்து நிற்றல் காண்க.

இவ்வாறு கள்ளுண்ட மகிழ்ச்சியால் சொல்லப்பட்டமையால், நீக்கப்படாது கொள்ள வேண்டுவதாயிற்று. இனி, பித்தினால் மயங்கிய கூற்று வந்துழிக் காண்க.

'வரையின்று' என்னாது 'கடிவரையின்று' என்றதனால் பிள்ளைகள் இளமைத்தன்மையால் மொழியுங்காலும் வரையப்படா வென்றறிக. இக்கூற்றும் வந்துழிக் காண்க.

(11)

(2) மாறுபடு பொருண்மொழி

102.

மாறுபடு பொருண்மொழி முன்மொழிந் ததற்கு

மாறுபடத் தோன்றி வருமொழித் தாகும்.

1. மால் - ஆசை.