பக்கம் எண் :
 
230தண்டியலங்காரம்

எ - ன், நிறுத்த முறையானே மாறுபடு பொருண்மொழி என்னும் வழுவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : மாறுபடு பொருண்மொழியாவது, முன்மொழிந்த சொற்பொருளோடு, மாறுபட்ட பொருள் தோன்றி வருமொழியுடைத்து எ - று.

'வருமொழி' என்றது அதன் பொருளை.

எ - டு :

'மின்னார் மணிப்பைம்பூண் வேந்தே! நினக்குலகில்

இன்னா தவர்யாரு மில்லையால் - ஒன்னார்

குலமுழுதும் கூற்றங் கொளவெகுண்டு நீயே

தலமுழுதும் தாங்கல் தகும்'

இ - ள் : இதனுள், ஒளியினை யுடைய மணிகள் இழைத்த பசும்பொன்னால் செய்த ஆபரணங்களை யுடைய வேந்தனே! நினக்கு இன்னாதவர் உலகில் யாவரும் இல்லை என்று கூறிப், பின்பு நின் பகைவர் உயிரை யெல்லாம் கூற்றுவன் குலத்தோடு கொள்ளும்படியாக வெகுண்டு நீயே இத்தல முழுவதும் தாங்குதல் நினக்குத் தக்கது என்றமையின், இது மாறுபடு பொருண் மொழி ஆயிற்று.

(12)

மேலதற் கோர் சிறப்புவிதி

103. காமமும் அச்சமும் கைம்மிகின் உரித்தே.

எ - ன், மேலதற்கு ஓர் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : காமம் கைம்மிகினும் அச்சம் கைம்மிகினும் அவ்வாறு உரைக்கப்படும் எ - று.

அவற்றுள், அச்சத்தால் மொழிந்தது

எ - டு :

'என்னோ டிகல்புரியப் பஞ்சவர்கள் அஞ்சாரோ

மின்னனைய பாஞ்சா லியைவிடேன் - அன்னோ!

மிகல்புரியுங் கூற்றனைய வீமன் எதிர்நின்(று)

இகல்புரிய வாற்றுவலோ யான்'

இ - ள் : இதனுள், என்னோடு மாறுபட்டு எதிர்த்தற்குப் பஞ்சபாண்டவர் அஞ்சாரோ என்றும், மின்னனைய பாஞ்சாலியை விடேன் என்றும் கூறிப், பின்பு ஐயோ! மேம்பாட்டினையுடைய கூற்றத்தை யொத்த வீமனுக்கு எதிரே நின்று மாறுபடுதற்கு யான் வல்லனோ என்றும் சொன்னமையால் அவ்வாறாதல் காண்க.

இது - அச்சம். மிகல் - மேம்பாடு. புரிதல் - செய்தல். இது மாறுபடு பொருண்மொழி யாயினும், அச்சம் கைம்மிக்குச் சொன்னமையின் கொள்ளற்கு உரித்தாயிற்று.

(13)

(3) மொழிந்தது மொழிவு

104. மொழிந்தது மொழிவே கூறியதுகூறி

வேறுபட வொருபொருள் விளங்கா தாகும்.

 எ - ன், நிறுத்தமுறையானே மொழிந்தது மொழிவு என்னும் வழுவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.