பக்கம் எண் :
 
சொல்லணியியல்231

இ - ள் : மொழிந்தது மொழிதலாவது - முன்னே கூறியவதனையே மீண்டும் கூறி, அதனால் வேறுபட ஒரு பொருள் விளங்காதது எ - று.

எ - டு :

'அங்கமி லாதவ னங்கன் தலம்புரியும்
வெங்கணையுங் காக்குங்கொல்? வேல்வேந்தர் - தங்கோன்
நிலையார்த் தொடையதுல னேரிழைக்காய் முன்னோர்
மலையாற் கடல்கடைந்தான் மால்'

இ - ள் : வேலைத் தாங்கிய அரசர்க்கரசனாகிய, நிலைத்த ஆத்தி மாலையைத் தரித்த ஒப்பில்லாத சோழன், அங்கம் இல்லாதவனாகிய மன்மதன் கைத்தலங்களால் எய்யப்படுகின்ற கொடிய அம்புகளையும் காப்பானோ? காப்பான்; ஏனெனில், ஆதியில் திருமால் திருமகளைப் பெறவேண்டி ஒரு மலையாலே பாற்கடலைக் கடைந்தான் எ - று.

இதனுள், 'அங்கமில்லாதவன்' என்று கூறியபின்னும், மீண்டும் அவனையே 'அனங்கன்' என்றும் சொன்னமையான் மொழிந்தது மொழிவாகிக் குற்றமாயிற்று.

அஃதேல், சொற்பின்வருநிலையும், பொருட் பின்வருநிலையும், சொற்பொருட் பின்வருநிலையும் மொழிந்தது மொழிவாகிக் குற்றமாகாதோ? எனின், அற்றன்று. சொற்பின்வருநிலையாவது; மொழிந்த சொல்லே மொழியினும் பொருள் வேறுபடும். அது,

'மால்கரி காத்தளித்த மால்' (பக் - 88) என்பது.

இ - ள் : மத மயக்கத்தை யுடைய யானையைக் காத்த திருமால் என்பதாம்.

(வி - ரை) இத்தொடரில் 'மால்' என்ற சொல் இருமுறை வரினும், முன்னையது மயக்கம் என்ற பொருளிலும், பின்னையது திருமால் என்ற பொருளிலும் வருதல் காண்க.

பொருட் பின்வருநிலையாவது: மொழிந்த பொருளையே மொழியினும், சொல் வேறுபடப் பொருள்தோறும் வருவதோர் அலங்காரம் உண்டாகும். அது,

'அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா' (பக் - 88) என்பது.

இ - ள் : மலர்ந்தன காந்தள்கள்,மலர்ந்தன காயாமலர்கள் என்பதாம்.

(வி - ரை) இதன்கண் அவிழ்ந்தன, அலர்ந்தன என்ற சொற்கள் ஒரு பொருளையே குறிப்பினும், சொல் வேறுபட்டு நிற்றல் காண்க.

சொற்பொருட் பின்வருநிலையாவது: சொல்லும் பொருளும் அதுவே யெனினும், அவற்றான் வெவ்வேறு பொருள்படுதல். அது,

'வைகலும் வைகல்' (பக் - 89) என்பது.

இ - ள் : நாள்தோறும் நாள் என்பதாம்.

(வி - ரை) 'வைகலும் வைகல்' என்புழிச் சொல்லும் பொருளும் ஒன்றாய் நிற்பினும், முன்னையது நாள்தோறும் என்ற பொருளிலும், பின்னையது கழிவு நாள் என்ற பொருளிலும் வருதல் காண்க.

(14)