பக்கம் எண் :
 
சொல்லணியியல்235

இ - ள் :ஈன்றதாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய் என்ற எல்லாத் தாயர்க்கும், எங்களுக்கும், எங்கள் தந்தையர்க்கும், இன்னும் எல்லோருக்கும், இவளே உயிராவள்; ஆதலின், அரசனே! இந்த நுண்ணிய இடையினையுடைய மாது உனக்கு அடைக்கலம்; இவளுக்கு இடர் ஒன்று மில்லாமல் இவளைக் காத்துக் கொள்வாயாக எ - று.

இது, கையடை கொடுத்தல். இதனுள் 'எங்களுக்கு' எனவும் 'நுனக்கு' எனவும் வழூஉச்சொல் புணர்க்கப்பட்டன ஆதலால் சொல்வழு ஆயிற்று.

'யாவகைய தாயர்க்கும்' என்று கூறிப், பின்னர் 'எங்களுக்கும்' என்று கூறியது தவறாகும்; இக்கூற்றிற்கு உரியாளும் தாய்மார்களில் ஒருத்தியாதலின்.

(20)

மேலதற்கோர் சிறப்புவிதி

111. வழக்கா(று) ஆயின் வழுவின் றதுவே.

எ - ன்,மேலதற்கு ஓர் சிறப்பு விதி உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் :அச்சொற்கள் வழக்காறாய் அடிப்பட்ட சான்றோரால் வழங்குவனவாயின் வரையப்படா, வழக்காறு என்று தழுவப்படும் எ - று.

மரூஉ, கட்டுரைக்கண் இலக்கணம் இன்றியும் வரப்பெறும் என்க.

எ - டு :

'யாவர் அறிவார்? இவரொருவர் இக்குறிஞ்சிக்

காவலரோ? விஞ்சையர் தங் காவலரோ? - பாவாய்!

அருமந்தன் னார்நம் அகன்புனம்விட் டேகார்

தெருமந் துழலுந் திறம்'

இ - ள் :பாவை போன்ற பெண்ணே! ஒப்பற்றவராகிய இவர், இக்குறிஞ்சி நிலத்திற்குத் தலைவரோ? வித்தியாதரர்களுடைய தலைவரோ? அருமருந்து போன்ற இவர், நம்முடைய விசாலமான தினைக்கொல்லையை விட்டுப் போகாதவராய் மயங்கி வருந்தும் தகைமையை எவர் அறிந்து சொல்லவல்லார்? எ - று.

இதனுள், 'அருமருந்தன்னார்' எனற்பாலது 'அருமந்தன்னார்' என அடிப்பட்டு வந்து, வழக்காறு ஆயிற்று. அல்லதூஉம், 'மலையமானாடு' - மலாடு எனவும், 'பாண்டியனாடு' - பாண்டி நாடு எனவும் வருவனவும், அவ்வழக்காறே எனக் கொள்க.

(21)

(1) யதிவழு

112. யதிவழு என்ப(து) ஓசை யறுவழி
நெறிப்பட வாரா நிலைமைய(து) என்ப.

எ - ன்,நிறுத்த முறையானே யதிவழுவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் :யதிவழுவாவது, ஓசைகொண்டு சீரறுக்கும் வழி, அறுத்தற்கு அரிதாய் வேறுபட்டுவரும் தன்மையதாகும் எ - று.

எ - டு :

'மாடு பயிலும் வரையாளி மால்யானைக்
கோடுபுயத் துண்டுழலுங் கொள்கைத்தாம் - காடு
அரிதாம் இயல்பிற்(று) அரையிருட்கண் வாரல்
பெரிதாகும் ஐய! பிழை'