பக்கம் எண் :
 
238தண்டியலங்காரம்

இ - ள் : சந்தி வழுவாவது எழுத்ததிகாரத்து ஓதப்பட்ட புணர்ச்சி யிலக்கணத்தோடு பொருந்தாது வருவது எ - று.

எ - டு :

'என்பூ டுருக இனைவேன் மனங்கலக்கும்
பொன்பூண் சுமந்த புணர்முலையீர்! - மின்போல்
நுடங்கிடைக்குங் காவலாய் நோக்கங் கவரும்
படங்கிடைக்கும் அல்குற் பரப்பு'

இ - ள் : எலும்பும் உள்ளே உருகும்படி வருந்துவேனாகிய எனது மனத்தைக் கலக்குகின்ற பொன்னாலாகிய அணிகலங்களைத் தாங்கிய இணைந்த கொங்கைகளை யுடையீர்! பாம்புப் படத்தினை எதிர்க்கும் நும் கடிதடப் பரப்பானது, மின்னலைப் போல் அசைகின்ற இடைக்குங் காவலாய், பார்ப்பவரது நோக்கம் கவரும் எ - று.

இதனுள், 'பொற்பூண்' என்பது 'பொன்பூண்' என வந்தமையிற் சந்தி வழுவாயிற்று.

(வி - ரை)

'னகார இறுதி வல்லெழுத் தியையின் 
றகாரமாகும் வேற்றுமைப் பொருட்கே'

(தொல் - புள்ளி - 37)

என்னும் விதிப்படி பொற்பூண் என்றாக வேண்டுவது, அங்ஙனமாகாது பொன்பூண் என நிற்றலின், இது சந்தி வழுவாயிற்று.

(26)

மேலதற்கோர் சிறப்புவிதி

117. இரண்டாம் வேற்றுமைக்(கு) எதிர்மறுத்தும் வருமே.

எ - ன், அச்சந்திவழு சிறுபான்மை ஆகுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியாயின் வல்லெழுத்து மொழிக்கு முதலாய் வந்துழி, 1ஏனை வேற்றுமையோடு மாறுபட்டு முடியவும் பெறும் எ - று.

எ - டு :

'இரவி துணைத்தாள் இகல்வேந்தர் சென்னி
விரவு மலர்பொழியும் மேவா - அரசிரிய
மின்பொழியும் செவ்வேல் வெறியோர் இனங்கவரப்
பொன்பொழியும் செங்கைப் புயல்'

இ - ள் : சூரிய வமிசத்தினனான சோழனுடைய இரண்டு பாதங்களும், பகை யரசர்களுடைய சிரசிலே சேர்ந்திருக்கின்ற மலரைச் சொரியும்; செம்மையாகிய வேலானது பகையரசர்கள் பயந்தோட மின்னலைச் சொரியும்; சிவந்த கையாகிய மேகமானது வறிஞர் கூட்டங் கொள்ளும்படி பொன்னைச் சொரியும் எ - று.

இதனுள், 'மலர்பொழியும்', 'மின் பொழியும்', 'பொன் பொழியும்' என இயல்பாய் முடிந்தன. என்னை சூத்திரம் என்றார்க்கு,

'இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும

...... ...... ...... ......

மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலும்'

(தொல் - தொகைமரபு - 15)

என்பவாகலின் என்க. என்றார்க்கு இதுவும் இலக்கணம் அன்றே;


1. 'பொதுமுடிபொடு மாறுபட்டு' என்பதும் பாடம்.