எழுத்ததிகாரத்தோடு மாறுபட்டு வந்ததுண்டோ எனின், மாறுபட்டு வரும் என்றதன்று; ஐகார வேற்றுமை பொதுவகையான் ஓதிய முடிவோடு பொருந்தாது, இவ்வாறு சிறுபான்மை வருமென்று ஓதினார் என்றறிக. பிரிபொருட் சொற்றொடர் முதலாக ஓதிய ஒன்பதும், இவ்வாறுவரின் வழு எனப் பொது இலக்கணம் கூறிச், சிறப்பு வகையான் இவ்வாறுவரின் வழுவன்று எனக் கூறியதல்லது, வேறென விதிக்கப்படாது எனக்கொள்க. (வி - ரை)'ரகார இறுதி யகார இயற்றே' (தொல் - புள்ளி - 67) என்ற விதிப்படி 'மலர்ப் பொழியும்' என்றாதல் வேண்டும். 'னகார இறுதி வல்லெழுத் தியையின், றகாரமாகும் வேற்றுமைப் பொருட்கே' (தொல் - புள்ளி - 37) என்ற விதிப்படி 'மிற்பொழியும்', 'பொற்பொழியும்' என்றாதல் வேண்டும். இங்ஙனமின்றி மலர்பொழியும் என மிகாது வந்தது அந்நூற்பாவில் 'மெய்பெற' என்ற இலேசால் இயல்பாயும் மிகுந்தும் வரலாம் என்னும் விதிப்படியாகும். ஏனைய இரண்டும் அந்நூற்பாவில், 'மெய் பிறிதாகிடத்து இயற்கை யாதலும்' என்னும் விதிப்படி வந்தனவாம். எனினும் இத்தொகை மரபு நூற்பா புணர்ச்சி விதிக்கு மாறுபாடு உடையதன்றோ? அங்ஙனமாக இதனை விதியாக எங்ஙனம் ஏற்க முடியும்? எனில், அற்றன்று. இத்தொகைமரபு நூற்பா புணர்ச்சிகளுக்கு மாறுபட்டதன்று. புணர்ச்சி விதிப்படி வருதலே பெரும்பான்மை; ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் மட்டும் அப்பொது விதி மாறி வருதலும் சிறுபான்மையுள என்பது இந்நூற்பாவின் கருத்தாகும். ஆதலின் இச்சிறுபான்மை விதியை இச்சொற்கள் பெற்றனவன்றி மாறுபட்டது அன்றென்க. இப்பாடலில் கூறப்பட்ட மூன்று சொற்களும் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியவாதல் காண்க. (27) மலைவு (1) இட மலைவு 118. | இடமெனப் படுபவை மலைநாடி யாறே. |
எ - ன், நிறுத்த முறையானே இடம் முதலிய மலைவு உணர்த்துவான் தொடங்கி, அவற்றுள் இடமாவன இவையென உணர்த்துதல் நுதலிற்று. இ - ள் : இடம் என்று கூறப்படுவன மலையும், நாடும், யாறும் எ - று. மலையாவன : இமயமலை முதலியன. நாடாவன : பதினெண்மொழி வழங்கு நிலங்கள். யாறாவன : கங்கை முதலியன. இவற்றின் மலைவாவது - ஒன்றினுள்ள பொருள் பிறிதொன்றினுளதாகச் சொல்லுதல். எ - டு ; | 'தென்மலையின் மான்மதமும் சாமரையும் தேமருசீர்ப் | | | பொன்மலையின் சந்தனமும் ஆரமும் - பன்முறையும் | | | பொன்னி வளநாடன் முன்றிற் பொதுளுமே | | | மன்னர் திறைகொணர வந்து' | எனவும், |
இ - ள் : பொதிய மலையிலுள்ள கஸ்தூரியும், சாமரையும், வாசனை பொருந்திய சிறப்புடைய மேருமலையிலுள்ள சந்தனமும்,
|