பக்கம் எண் :
 
240தண்டியலங்காரம்

பூமாலையும், அரசர்கள் திறைப் பொருள்களாகப் பன்முறையும் கொண்டுவர வந்து, காவிரி பாயும் வளம்பொருந்திய சோழ நாட்டை யாளும் சோழனுடைய முன்றிலிலே நிறையும் எ - று.

இதனுள், இமயத்தில் உள்ளன பொதியத்திற்கு உரியவாகவும், பொதியத்தில் உள்ளன இமயத்திற்கு உரியவாகவும் கூறினமையின், மலையிட மலைவு ஆயிற்று.

'தண்பொருநைச் செங்கனகம் மாதங் கிரித்தரளம்

வண்கலிங்கந் தந்த வயப்புரவி - பண்பு 

மருவும் யவனத்து மால்யானை சென்னி

பொருநர்க்கு வீசும் பொருள்'

எனவும் வரும்.

இ - ள் :குளிர்ச்சி பொருந்திய பொருநை யாற்றிலுள்ள செம்பொன்னும், மாதங்கிரியிலுள்ள முத்தும், வளப்பம் பொருந்திய கலிங்க தேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வெற்றி பொருந்திய குதிரைகளும், நற்குணம் சேர்ந்த யவன தேசத்து மதயானைகளும் ஆகிய இவைகளே, சோழன், தன்னைப் புகழ்ந்து பாடும் பொருநர்க்கு வாரி யிறைக்கும் பொருள்களாம் எ - று.

இதனுள், பொருநைக்குரிய தரளத்தை மாதங்கிரியோடு புணர்த்தும், மாதங்கிரிக்குரிய கனகத்தைப் பொருநையோடு புணர்த்தும் கூறினமையின், யாறிடமலைவு ஆயிற்று.

மற்றும் இதனுள், யவனத்திற்குரிய புரவியைக் கலிங்கத்தோடு புணர்த்தும், கலிங்கத்துக்குரிய யானையை யவனத்தோடு புணர்த்தும் கூறினமையின் நாடிடமலைவு ஆயிற்று.

மலைவு - மாறுபாடு. இடமலைவு - இடத்தின் மாறுபாடு. இங்ஙனமே மேல் வருவனவற்றிற்கும் கொள்க.

(28)

(2) கால மலைவு

119. காலம் பொழுதொடு பருவமென்(று) இரண்டே.

எ - ன்,காலம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் :காலமாவது, பொழுதும் பருவமும் என இரண்டாம் எ - று.

அவற்றுள், பொழுதாவன: விடியல், உச்சி, எற்பாடு, மாலை, யாமம், வைகறை என இவை. இவற்றுள், ஒரோவொன்றுக்கு நாழிகை பப்பத்தாக, ஆறு பொழுதிற்கு நாழிகை அறுபதாம். இவை தமிழ் நூல் முடிபு.

பொழுது மலைவாவது: ஒரு பொழுதிற்குரிய பூவும், புள்ளும், தொழிலும் பிறிதொன்றற்கு உரியவாக உரைப்பது.

எ - டு :

'செங்கமலம் வாய்குவியத் தேங்குமுதம் கண்மலர
எங்கும் நெடுவானில் மீனிமைப்பப் - பொங்குதயத்
தோராழி வெய்யோன் உகந்தான் மலர்ந்ததே
நீராழி சூழ்ந்த நிலம்'

இ - ள் :சிவந்த தாமரை மலர்கள் முகங்கூம்ப, வாசனை பொருந்திய அல்லிமலர்கள் முகமலர, நீண்ட ஆகாயத்தில் எங்கும் நாள்மீன் ஒளிர, பொங்குகின்ற தோற்றத்தை யுடைய