பக்கம் எண் :
 
சொல்லணியியல்241

ஒற்றைச் சக்கரம் பொருந்திய தேரினனாகிய சூரியன் மகிழ்ந்து உதயஞ் செய்தான்; கடல் சூழ்ந்த உலகம் விளங்கிற்று. எ - று.

இதனுள் மாலைக்கு உரியன, காலையோடு புணர்த்ததனால் பொழுதுமலைவு ஆயிற்று. பிறவுமன்ன.

(வி - ரை) சூரியன் உதித்த பொழுது தாமரை மலர்தலும், அல்லி குவிதலும், நாள்மீன் ஒளித்தலுமே மரபு. அங்ஙனமின்றி மாலை நேரத்தில் நிகழ வேண்டிய தாமரை மலர்தல், அல்லி குவிதல், நாள்மீன் இமைத்தல் ஆகியவற்றைக் காலைக்கண் உளவாகக் கூறியது பொழுது மலைவாம்.

பருவமாவன: கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என இவை. ஆவணி முதல் இவ்விரண்டு திங்கள் ஒவ்வொன்றாக அறுவகைப்படும். இவைவடநூற்கும் ஒக்கும்.

பருவ மலைவாவது: ஒரு பருவத்திற்குரியன, பிறிதொரு பருவத்தில் தோன்றினவாக் கூறல்.

எ - டு :

'காதலர் வாரார் களிக்கும் மயிலகவத்

தாதவிழ் பூங்குருந்தின் தண்பணையின் - மீதே

தளவேர் முகைநெகிழத் தண்கொன்றை பூப்ப

இளவேனில் வந்த திதோ'

இ - ள் : மகிழ்கின்ற மயில்கள் ஆட, மகரந்தங்கள் பரந்த மலர்களையுடைய குருந்த மரத்தின் குளிர்ந்த கிளைமீதே படர்ந்த முல்லைக்கொடியில் அழகிய முல்லையரும்புகள் மலர, குளிர்ந்த கொன்றை மரம் பூத்தலைச் செய்ய, இளவேனிற் பருவம் இதோ வந்தது; எனது காதற்குரிய தலைவர் வந்திலர் எ - று.

இதனுள், கார்ப்பருவத்திற்கு உரியன, இளவேனிற் பருவத்தில் தோன்றினவாகப் புணர்த்தமையின், பருவமலைவு ஆயிற்று. பிறவுமன்ன.

(29)

(3) கலை மலைவு

120.

கலையெனப் படுபவை காண்டக விரிப்பிற்

காமமும் பொருளும் ஏமுறத் தழுவி

மறுவறக் கிளந்த அறுபத்து நான்கே.

எ - ன், கலைகளாவன இன்னவைக்குக் கருவியாகத் தோன்றும் எனவும், அவற்றது தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : கலை என்று சொல்லப்படுவனவற்றை விளங்க விரித்துரைப்பின், அவை இன்பமும் பொருளும் அழிவுபடாமல் தழுவிக் குற்றமறச் சொல்லப்படுவனவாய அறுபத்துநான்கு ஆகும் எ - று.

அவற்றின் மலைவாவது, அவ்வக் கலைநூலில் கூறியபடி கூறாது பிறழக் கூறுவது.

எ - டு : 'ஐந்தாம் நரம்பாம் பகைவிரவா(து) ஆறாக
வந்த கிளைகொள்ள நான்காய - முந்தை

இணைகொண்ட யாழியற்றும் ஏந்திழைதன் ஆவித்

துணைவன் புகழே தொடுத்து'