பக்கம் எண் :
 
116இறையனார் அகப்பொருள்

                      சூத்திரம்-22

          அம்பலும் அலருங் களவு.

என்பது என்னுதலிற்றோ எனின், களவொழுக்கினது நெடுங்காலச்
செலவின்கண் இவர்க்கு நிகழும் உள்ள நிகழ்ச்சி இன்னது என்று
உணர்த்துதல் நுதலிற்று.

    
இதன் பொருள்: அம்பலும் அலரும் களவு என்பது-அவ்விரண்டும்
நிகழ்ந்தன என்பது தாம் அறியினல்லது யாவரும் அறிவாரில்லை;
இன்மையின், அவை களவு என்றவாறு; களவு என்பது, செய்தாரே அறிந்து
மற்றொருவர் அறியாததாகலான் என்பது.

        
அம்பல் என்பது முகிழ்முகிழ்த்தல்,
        அலர் என்பது சொல் நிகழ்தல்;
        அம்பல் என்பது சொல் நிகழ்தல்,
        அலர் என்பது இல் அறிதல்;
        அம்பல் என்பது இல் அறிதல்,
        அலர் என்பது அயல் அறிதல்;
        அம்பல் என்பது அயல் அறிதல்,
        அலர் என்பது சேரி அறிதல்;
        அம்பல் என்பது சேரி அறிதல்,
        அலர் என்பது ஊர் அறிதல்;
        அம்பல் என்பது ஊர் அறிதல்,
        அலர் என்பது நாடு அறிதல்;
        அம்பல் என்பது நாடு அறிதல்,
        அலர் என்பது தேசம் அறிதல்.

     அது பொருந்தாது; என்னை, அம்பல் எனப்பட்டதே அலரும், அலர்
எனப்பட்டதே அம்பலும் ஆயின. இஃது அம்பற்கு இலக்கணம், இஃது
அலருக்கு இலக்கணம் என்று விசேடங் காட்டிற்றிலர்; இவை இரண்டால்
தம்முள் வேற்றுமை பெறப்படுமாகலான் என்பது.

     மற்று என்னோ எனின், அம்பல் என்பது சொல்நிகழாதே
முகிழ்முகிழ்த்துச் சொல்லுவதாயிற்று; இன்னதின் கண்ணது என்பது
அறியலாகாது என்பது.

     அலர் என்பது இன்னானோடு இன்னாளிடை இதுபோலும் பட்டதென
விளங்கச் சொல்லி நிற்பது.