பக்கம் எண் :
 
118இறையனார் அகப்பொருள்

அதுவும் உரித்து என, மற்றும் ஒன்றுண்டு கூறற்பாலது அஃதியாதோ எனின்,
அவனுடன்போக்கும் உரித்து என்றவாறு.

     அஃது உரியவாமாறு சொல்லுதும்: இது பலராலும் அறியப்பட்டது
என்னுங் கருத்தால் நிகழ்கின்ற, தலைமகட்கும் தோழிக்கும் உடனே நிகழும்.
இருவரும் யாமே உணர்ந்தேம் எனக் கருதுதலாற் கதுமென
இந்நிலைமைக்கண் வரினும் வாராமைக்கொள்வேன் என்னுங் கருத்தினால்,
பண்டு அவன் வந்து பயின்ற இடத்தே தோழி செல்லும்; செல்லத், தோழி,
தன் எதிர்ப்பட்ட தலைமகனை வலங்கொண்டு சார்ந்து, ‘நின்னால்
தலையளிக்கப்பட்ட தலையளி அலராயிற்று, பலராலும் அறியப்பட்டு’
என்னும்: அதற்குச் செய்யுள்:

                     
அலரறிவுறுத்தல்

  ‘பலராய் எதிர்நின்று பாழிப்பட் டார்தங்கள் பைந்நிணம்வாய்
  புலரா அசும்புடை வேல்மன்னன் வேம்பொடு போந்தணிந்த
  மலரார் மணிமுடி மான்தேர் வரோதயன் வஞ்சியன்னாட்கு
  அலராய் விளைகின்ற தாலண்ணல் நீசெய்த ஆரருளே’.      (165)

  ‘பொருள்தான் எனநின்ற மானதன் பூலந்தைத் தோற்றுப்புல்லார்
  இருள்தா னடைகுன்றம்ஏறவென் றோன்கன்னி ஈர்ம்பொழில்வாய்
  மருள்தான் எனவண்டு பாடுந்தண் தாரண்ணல் வந்துசெய்த
  அருள்தான் அலராய் விளைகின்ற தால்மற்றிவ் வாயிழைக்கே’.  ( )

     ‘அறிந்தோர் அறனிலர் என்றலர் சிறந்த
     இன்னுயிர் கழியினும் நனியின் னாதே
     புன்னையங் கானற் புணர்குறி வாய்த்த
     பின்னீர் ஓதியென் தோழிக் கன்னோ
     படுமணி யானைப் பசும்பூண் சோழர்
     கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட் டாங்கட்
     கள்ளுடைத் தடவிற் புள்ளொலித் தோவாத்
     தேர்வழங்கு தெருவின் அன்ன
     கௌவையா கின்ற தையநின் அருளே’.        (நற்றிணை-227)

      இது சொல்லிப், பின்னும், ‘நீ இது புகுதருந்துணையும் இவ்வாறு
ஒழுகுவாயாயினாய், அறனறியாமையான்; அறிதியென்னின் இது புகுதாமை
வரைந்தெய்துவாய் மன்னோ, அல்லதூஉம், பிறரும் வரைந்தெய்துதற்கு
முலைவிலையொடு புகுந்து பொன்னணிவான் நின்றாரும் உளர்’ எனப்
படைத்து மொழிந்து சொல்லும்; அதற்குச் செய்யுள்: