பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - கற்பு 165
 

     தலைமகன் வேந்தர்க்குற்றுழிப் பிரிந்தவிடத்துத் தலைமகள் வேறுபட்டு
ஆற்றாளாயினாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பதுபடத்
தலைமகள் சொல்லியதற்குச் செய்யுள்:


கார்மிசை வைத்தல்


   ‘படலைப் பனிமலர்த் தாரவர் வைகிய பாசறைமேல்
   தொடலைக் கமழ்நறுங் கண்ணியி னாய்சென்று தோன்றுங்கொல்லோ
   அடலைப் புரிந்தசெவ் வேலரி கேசரி தென்குமரிக்
   கடலைப் பருகி இருவிசும் பேறிய கார்முகிலே’             (244)

என்பது.

     அதுகேட்ட தோழி, ‘இவள் பிரிவாற்றாமையான் அன்று வேறுபட்டது;

அவர் குறித்துப் பிரிந்த கார் வரப், பிரிந்த பாசறைக்கண் தோன்றியக்கால்,
தாம் எடுத்துக்கொண்ட வினை முடியாது மீள்வர்கொல்லோ எனப்போலும்
இவள் ஆற்றாளாயது; யான் பிழைக்க உணர்ந்தேன்’ என ஆற்றுவாளாவது.

   ‘வாமான் நெடுந்தேர் வயமன்னர் வாள்முனை யார்க்கும் வண்டார்
   தேமா நறுங்கண்ணி யாய்சென்று தோன்றுங்கொல் சேரலர்தம்
   கோமான் கடற்படை கோட்டாற் றழியக் கணைஉகைத்த
   ஏமாண் சிலையவன் கன்னிநல் நீர்கொண்ட ஈர்முகிலே.’      (245)

    
வேந்தற்குற்றுழிப் பிரிந்த தலைமகன் தான் குறித்த பருவ வரவின்கண்
வினைமுற்றி மீளலுறுவான் தேர்ப்பாகற்குச் சொல்லியதற்குச் செய்யுள்:


நிலைமை நினைந்து கூறல்


   ‘இன்பார்ப் பொடுங்க வலஞ்சிறை கோலி இடஞ்சிறையால்
   அன்பாற் பெடைபுல்லி அன்னம் நடுங்கும் அரும்பனிநாள்
   என்பாற் படரொடென் னாங்கொல் இருஞ்சிறை ஏற்ற மன்னர்
   தென்பாற் செலச்செற்ற கோன்வையை நாடன்ன சேயிழையே.’   ( )

   ‘அன்புடை மாதர்கண் டாற்றுங்கொல் ஆற்றுக் குடியடங்கா
   மன்புடை வாடவென் றான்தமிழ் நாட்டு வலஞ்சிறைக்கீழ்
   இன்புடை ஏரிளம் பார்ப்புத் துயிற்றி இடஞ்சிறைக்கீழ்
   மென்பெடை புல்லிக் குருகு நரல்கின்ற வீழ்பனியே.’         (247)

      இதுகேட்ட தேர்ப்பாகன் விரைந்து போதற்கு ஒருப்படுவானாம்.

      இன்னும், வேந்தர்க்குற்றுழிப் பிரிந்து வினைமுற்றிய தலைமகன்
இவ்வாறுஞ் சொல்லும்; அதற்குச் செய்யுள்: