பக்கம் எண் :
 
168இறையனார் அகப்பொருள்

  ‘கடிக்கண்ணி வேந்தரை யாற்றுக் குடிக்கன்னி வாகைகொண்டே
  முடிக்கண்ணி யாவைத்த மும்மதில் வேந்தன் முசிறியன்ன
  வடிக்கண்ணி வாட வளமணி மாளிகைச் சூளிகைமேல்
  கொடிக்கண்ணி தாம்வண்ணம் நண்ணிவந் தார்த்தன
                                    கொண்டல்களே.’

     இதுவும் மேலவற்றோடு ஒக்கும்.

     இனி, முகில் நோக்கிச் சொல்லுவானாய்த் தேர்ப்பாகன் கேட்பச்
சொல்லியதற்குச் செய்யுள்:

                   
முகிலொடு கூறல்

  ‘பண்டேர் சிறைவண் டறைபொழிற் பாழிப்பற் றாவரசர்
  புண்டேர் குருதி படியச்செற் றான்புனல் நாடனையாள்
  கண்டே ரழிந்து கலங்கும் அவள்தன் கடிநகர்க்கென்
  திண்டேர் செலவன்றி முன்செல்லல் வாழி செழுமுகிலே.’      (259)

     இது கேட்ட தேர்ப்பாகன் விரைந்து தேர் கடாவுவானாவது பயன்.
வேந்தர்க்குற்றுழிப் பிரிந்து வினைமுற்றிப் புகுந்த தலைமகனது வரவுணர்ந்து
தோழி தலைமகட்குச் சொல்லுமதற்குச் செய்யுள்:

                  
வரவெடுத்துரைத்தல்


  ‘கொற்றாங் கயில்மன்னன் கோனெடு மாறன்தென் கூடலன்ன
  முற்றா இளமுலை மாதே பொலிகநம் முன்கடைவாய்ச்
  செற்றார் பணிதிறை கொண்டநம் அன்பர் செழுமணித்தேர்ப்
  பொற்றார்ப் புரவிகள் ஆலித்து வந்து புகுந்தனவே.’          (260)

  ‘ஆரும் அணியிளம் போந்தையும் வேம்பும் அலர்ந்துதண்தேன்
  வாரும் கமழ்கண்ணி வானவன் மாறன்தன் மாந்தை அன்னாய்
  காரும் கலந்து முழங்கிமின் வீசின்று காதலர்தம்
  தேரும் சிலம்பிப் புகுந்தது நங்கள் செழுநகர்க்கே.’           (261)


      இனித், தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி,
வினைமுற்றி மீள்வார் சொல்லிய பருவம் தூதாகி வந்தது என்னும்; அதற்குச்
செய்யுள்:

                
பருவத்தூது பாங்கிபகர்தல்

 
‘முன்றான் முகிழ்முலை ஆர முயங்கி முறுவல்உண்டு
  சென்றார் வரவிற்குத் தூதாய் எழுந்தது தென்புலிப்பை
  1வென்றான் விசாரிதன் வேல்நெடு மாறன் வியன்முடிமேல்
  நின்றான் மணிகண்டம் போல்இருள் கூர்கின்ற நீள்முகிலே.’    (262)

(பாடம்) 1. வென்றா னழிய நறையாற் றகத்துவென் றான்முடிமேல