இனித், தலைமகன், வினைமுற்றிப் புகுந்து, தலைமகளோடு இனிதிருந்து,
தோழிக்குச் சொல்லியதற்குச் செய்யுள்:
தலைமகன் தோழிக்குக் கூறல்
‘மடையார் குவளை நெடுங்கண் பனிமல்க வந்துவஞ்சி
இடையாள் உடனாய் இனிது கழிந்தன் றிலங்குமுத்தக்
குடையான் குலமன்னன் கோனெடு மாறன் குளந்தைவென்ற
படையான் பகைமுனை மேற்சென்று நீடிய பாசறையே.’
(263)
இனிப், பொருட்குப் பிரியலுற்ற தலைமகன் தோழியால்
தலைமகட்குப்
பிரிவு உணர்த்துவித்தற்குச் செய்யுள்:
பொருட்பிரிவுணர்த்தல்
‘இல்லார் இருமையும் நன்மையெய் தாரென்
றிருநிதிக்குக்
கல்லார் சுரஞ்செல்வ தேநினைந் தார்நமர் காய்ந்தெதிர்ந்த
புல்லார் அவியநெல் வேலிப் பொருகணை மாரிபெய்த
வில்லான் விசாரிதன் தென்புனல் நாடன்ன மெல்லியலே.’
(264)
அது கேட்டு ஆற்றாத்தன்மையளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியதற்குச்
செய்யுள்:
தலைமகள் ஆற்றாதுரைத்தல்
‘ஊனங் கடந்த உயர்குடை வேந்தன் உசிதன்ஒன்னார
மானங் கடந்துவல் லத்தமர் வாட்டிய கோன்படிமேல்
ஈனங் கடந்தசெங் கோன்மன்னன் தெம்முனை போலெரிமேய்
கானங் கடந்துசென் றோபொருள் செய்வது காதலரே.’
(265)
தோழி தலைமகள் நிலைமை தலைமகற்குச் சொல்லியதற்குச் செய்யுள்:
தலைவிநிலைமை தோழி சாற்றல்
‘விரைதங்கு நீள்முடி வேந்தன் விசாரிதன்
வெம்முனைபோல்
வரைதங்கு கானமர் செல்லுப என்றலும் வாள்நுதலாள்
நிரைதங்கு சங்கு கழலக்கண் நித்திலஞ் சிந்தநில்லா
அரைதங்கு மேகலை மெல்லடி மேல்வீழ்ந் தரற்றினவே.’
(266)
‘மன்னேந் தியபுகழ் வாள்நெடு மாறன்தன்
மாந்தைஅன்ன
மின்னேந் தியஇடை யாய்நமர் செல்வர்வெங் கானமென்னப்
பொன்னேந் திளமுலை பூந்தடங் கண்முத்தம் தந்தனபோய்
என்னேந் தியபுக ழீர்னிச் செய்யும் இரும்பொருளே.’
(267) |