பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - கற்பு 197
 

‘நம்பெருமாட்டி பிறந்த குலம் மேனாள்தொட்டும் ஒழுக்கச் சிதைவின்றி
விழுப்பமுடைத்தாய் ஓங்கி வாராநின்றதொரு பெருங்குலமன்றே, அக்குலத்தை
நீ அழித்தல் தக்கதோ! நாணும் கற்பும் அன்றே பெண்டிற்கு அணிகலமாவன
என்பதனால், இக் குலத்தினவர் கற்பெனப்பட்ட சிறை அழியாமை
காத்துக்கொண்டொழுகினார், அதனை நீ அழிக்கின்றாயாகலின் நின்கட்
பெரியதோர் பழியாக்குகின்றாய்’ என்றும், ‘நம்பெருமானும் தமது
ஆண்மைத்தன்மை காட்டிப் பிரிந்தார், நீயும் அவர் கருதியது முடித்துவருந்
துணையும் கற்புக் காத்திருக்க வேண்டும்’ என்றும், சான்றோர் மகளிர் என்பார்
சிறியரன்றிப் பெரியராகல்வேண்டும்; அத்தன்மை யென்பது தங்குலநோக்கித்
தம் கற்புக்காத்து ஒழுகின், அதனின் மிக்கதில்லை’ என்றும் இவ்வகை
ஆற்றுவித்தல், ‘சிறைப்புறங் குறித்தல்’ என்பது; அதற்குச் செய்யுள்:
 


சிறைப்புறங் குறித்தல்


  ‘உலத்திற் பொலிந்ததிண் தோள்மன்ன னொண்தே ருசிதன்மற்றிந்
  நிலத்திற் பொலிந்தசெங் கோலவ னீள்புனற் கூடலன்ன
  நலத்திற்கு நாணிற்குங் கற்பிற்கு 1ஞானத்தி னல்லநங்கள்
  குலத்திற்குந் தக்கதன் றாலின்னை யாகுதல் கோல்வளையே.’   (313)

   இவ்வகைசொல்லி ஆற்றுவித்தலே, ‘சிறைப்புறங் குறித்தல்’ என்றவாறு. (21)
 


சூத்திரம்-55


     சிறைப்புறம் குறியா தோன்றலும் உளவே
     அவற்புணர் வறியும் குறிப்பின் ஆன.

என்பது என்னுதலிற்றோ எனின், தலைமகன் பிரிந்தவழித் தலைமகள்
ஆற்றாளாயினவிடத்துத் தலைமகனது வரவுசொல்லி ஆற்றுவிக்க என்பது
உணர்த்துதல் நுதலிற்று.

    இதன் பொருள்: சிறைப்புறம் குறியா தோன்றலும் உளவே என்பது -
மேல் தோழி கற்பெனப்பட்ட சிறையை அழிக்கின்றாயென்றன்றே
ஆற்றுவித்தது, அவ்வாறன்றி வருவனவும் உள என்றவாறு; அவன் புணர்வு
அறியும் குறிப்பின் ஆன என்பது - தலைமகன் வினைமுற்றியானும்
பொருண்முற்றியானும் வருங் குறிப்பின்கண் என்றவாறு.

    1. ஞாலத்தி.