‘நெருநலு முன்னாள் எல்லியும் ஒருசிறைப்
புதுவை யாகலிற் கிளத்தல் நாணி
நேரிழை வளைத்தோள் நின்தோழி செய்த
ஆருயிர் வருத்தங் களையா யோவென
எற்குறை யுறுதிர் ஆயிற் சொற்குறை
எம்பதத் தெளியள் அல்லள் எமக்கோர்
கட்காண் கடவுள் அல்லளோ பெரும
வாய்கோன் மிளகின் மலையங் கொழுங்கொடி
துஞ்சுபுலி வரிப்புறந் தைவரும்
மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே.’
இனி, இவ்வகையுஞ் சொல்லும்; ‘நீயிர் பெரியீர்,
யாம் சிறியேம்,
நும்மோடு எம்மிடைக் கட்டுரை பொருந்தாது’ என்னும்; அதற்குச் செய்யுள்:
குலமுறை கூறி மறுத்தல்
‘நடைமன்னும் என்றெம்மை நீர்வந்து நண்ணன்மின் நீர்வளநாட்
டிடைமன்னு செல்வர் நுமரெமர் பாழி இகலழித்த
படைமன்னன் தன்குல மாமதி போற்பனி முத்திலங்கும்
குடைமன்னன் கோட்டுயர் கொல்லியஞ் சாரற் குறவர்களே.’ (117)
‘உற்றவ ரேநுமக் கொண்புனல் நாட்டுறு செல்வர் சொல்லின்
மற்றெமர் ஆய்விடின் வானவன் தானுடை மானினையச்
செற்றமர் சேவூர்ப் புறங்கண்ட திங்கள் திருக்குலத்துக்
கொற்றவன் மாறன் குடகொல்லி வாழுங் குறவர்களே.’
(118)
‘இழைவளர் பூணண்ணல் ஈர்ம்புனல் நாடனை நீயெமரோ
மழைவளர் மானக் களிறுந்தி மாநீர்க் கடையல்வென்ற
தழைவளர் பூங்கண்ணி மூன்றுடை வேந்தன்தண் ணம்பொதியிற்
குழைவளர் ஆரத் தருவியஞ் சாரற் குறவர்களே.’
(119)
‘இவளே,
கானம் நண்ணிய காமர் சிறுகுடி
நீனிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீனெறி பரதவர் மகளே நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச்சுறா வறுத்த உணங்கல் வேண்டி
இனப்புள் ஒப்பும் எமக்குநலன் எவனோ
புலவு நாறுதுஞ் செலநின் றீமோ
பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்ம னோரிற் செம்மலும் உடைத்தே.’
(நற்றிணை, 45)
|