உதாரணம் |
“இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு”1 |
(குறள்-1152) |
எனவும், |
“குக்கூ என்றது கோழி அதனெதிர் துட்கென்றற் றென்றூஉ நெஞ்சம் தோள்தோய் காதலர்ப்பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே”2 |
(குறுந்-157) |
எனவும் வரும். |
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையும் என்பது-புதல்வன்றோன்றிய நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறுமாறு பண்ணிச் செறிவு நீக்கிய இளிவந்த நிலையின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. |
இளிவந்த நிலையானது தன்னை அவமதித்தான் என்னுங் குறிப்பு. |
உதாரணம் |
“கரும்புநடு பாத்திக் கதிர்த்த ஆம்பல் சுரும்பு பசிகளையும் பெரும்புனல்ஊர புதல்வனை யீன்ற வெம்மேனி முயங்கல்மோ தெய்யநின் மார்பு சிதைப்பதுவே”3 |
(ஐங்குறு-65) |
எனவரும். |
|
1. பொருள் : களவுக் காலத்து அவர் பார்வை புணர்ச்சி குறித்தமையால் இனிமையுடையதாய் இரா நின்றது. இன்று அவர் புணர்ச்சி பிரிவை நினைவுபடுத்துவதால் அஞ்சும் துன்பம் உடையதாய் இராநின்றது. |
2. பொருள் : கோழி குக்கூ எனக் கூவியது. அதுகேட்டு என் நெஞ்சம் அதற்கு எதிராக நம் தோளைப் புணரும் காதலரை நம்மிற் பிரிக்கும் வைகறைப் பொழுதானது வந்ததே எனத்துட்கு என நடுங்கியது. |
3. பொருள் : கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியில் முளைத்துத் தழைத்த ஆம்பலானது வண்டின் பசியைத் தேன் கொடுத்துப் போக்கும் பெரும்புனல் ஊரனே! புதல்வனைப் பயந்த; எம்மேனியைத் தழுவுதலைவிடுக; அது நின் மார்பின் அழகைச் சிதைத்துவிடும் ஆதலால். |