புரவியும் பூணிலை முனிகுவ விரகில மொழியல்யாம் வேட்டத்தில் வழியே”1 |
(நற்றிணை-380) |
‘வாயிலின் வரூஉம் வகை’ என்றமையான், தன் ஆற்றாமையும் வாயில்களாகக் கொள்ளப்படும் என்பது பெற்றாம். |
“புல்லென் மகிழ்ந புலத்தலும் இல்லேன் கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குளமடைநீர் விட்டெனக் காலணைந் தெதிரிய கணைக்கொட்டுவாளை அள்ளலங் கழனி உள்வாயோடிப் பகடுசேறுதைத்த புள்ளிவெண் புறத்துச் செஞ்சால் உழவர் கோற்புடை மதரிப் பைங்காற் செறுவின் அணைமுதற்புரளும் வாணன் சிறுகுடி அன்னஎன் கோல்நேர் எல்வளை நெகிழ்த்த நும்மே”2 |
(நற்றிணை-340) |
|
1. பொருள் : பாணனே! எம் ஆடை எண்ணெயும் புகையும் படிந்து கண்ணின் மையும் படிந்து அழுக்கேறியுள்ளது. எம் தோளும் முலைத் தீம்பால் பிலிற்றப் புதல்வனைத் தழுவியதால் ஈன்ற அணிமை நாற்றம் நாறும். அதனால் எப்போது நாற்றம் இல்லாத சேரியில் தன் தேரை நிறுத்தும் தலைவனுக்கு யாம் இப்போது தகுதியுடையோம் அல்லேம். நீ யாழ் மீட்டுவதால் எம்மை கவர வல்லனாயினும் அவ்வாறு மீட்டி எம்மைப் பணியாதே. நீ பாடும் வரையிலும் தேரில் பூட்டிய குதிரைகளும் நெடுநேரம் பூட்டியிருப்பதை வெறுக்கும். யாம் விரும்பியது கிட்டாத நிலையில் நீ நின் விரகு இல்லாத மொழிகளைக் கூறாதே. அவரைப் பரத்தையர் சேரிக்கே கொண்டு செல்க. |
2. பொருள் : மகிழ்ந! வாணனது சிறுகுடிபோலும் எனது வளையை பரத்தையிற் பிரிவால் நெகிழச் செய்த நின்னைப் புல்லேன், புலத்தலும் செய்யேன். சிறு குடியின் சிறப்பு பின்வருவது: யானையும் தேரும் உடைய செழியனது பெயர்கொண்ட குளத்தில் நீர் மடையையுடைத்து வெளிச் சென்ற வாளைமீன் கழனியின் வாய்க்கால் வழியோடி உழும் பகட்டின் காற்சேறு ஒருபுறம் படிய உழவர் குறுங்கோலால் அடிப்பதற்கும் தப்பி வரம்பிற் சென்று புரளும்படியானது வாணனது சிறுகுடி. (இதன்மூலம் உள்ளுறை கொள்க. வாளை தலைவனாகக் கொள்க). |