பக்கம் எண் :

106தொல்காப்பியம் - உரைவளம்
 

செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென்
மகன்வயிற் பெயர்தந்தேனெ யதுகண்
டியாமுங் காதலெ மவற்கெனச் சாஅய்ச்
சிறுபுறங் கவையினனாக வுறுபெயற்
றண்டுளிக் கேற்ற பலவுழு செஞ்செய்
மண்போன் நெகிழ்ந்தவற் கலுழ்ந்தே
நெஞ்சறை போகிய வறிவினேற்கே”
1
  

(அகம்-26)
  

இதனுள்,  ஒருத்தியை  வரைந்து  கூறாது  நல்லோரைப்  பொதுவாகக்  கூறியவாறும் வேண்டினமெனப்
புலம்பு காட்டிக் கலுழ்ந்ததென ஈரங் கூறியவாறுங் காண்க.
  

தங்கிய  ஒழுக்கத்துக்  கிழவனை  வணங்கி எங்கையர்க்கு உரையென இரத்தற் கண்ணும்-பரத்தையர்
மாட்டுத் தங்கிய  செவ்வியை  மறையாத  ஒழுக்கத்தோடேவந்த  தலைவனை  நீ  கூறுகின்ற  பணிந்த
மொழிகளை எங்கையர்க்கு வணங்கிக் கூறென இரந்து கோடற்கண்ணும்.
  

உதாரணம்
  

“அகன்றுறை யணிபெற”  


1. பொருள் : தோழீ! காதலர், யானைமருப்பின் இரும்புப் பூண்போலவுள்ள முலைக் காம்புகள் தம்
மார்பகத்தோடு   முயங்குதலைத்   தடுக்காமல்   விடுக   என்று   சொல்லி  யான்  விடுவீராக 
எனக்கூறவும் கேளாதவராய்ப்  புல்லி  முலைகளைப்  பாராட்டிய  காலங்களும்  உள.  இன்றோ
புதல்வனை வேறிடம்  பாராதபடித்  தடுக்கும்  பாலால்  சரிந்தமென்முலைகள்  அவர்  மார்பில்
பருக்கும்படி அவரை முயங்க வேண்டினேன்;  ஆனால்   அவர்   தம்  மார்பில்  பால்படுதற்கு 
அஞ்சினார்.   அப்போது   அவரது   அணைத்தகைகள்   நெகிழ்தலைக்  கண்டு  செவிலியின் 
கையில்   இருந்த   புதல்வனைக்   காட்டியாம்  இச்  செல்வனுக்குப்  பொருந்தினேம்.   நீயிர் 
பரத்தையர்க்குப்  பொருந்தினீர்  என்று  கூறிப்  புதல்வன்  பக்கம்  சென்றேன்.  அது  கண்டு 
தலைவனும் யாமும் புதல்வனிடம் அன்புடையேம் என்று கூறிவந்து என் முதுகை அணைத்தனன்.
அப்போது மழையை ஏற்ற உழுது பதப்பட்ட வயல் மண்போல என் நெஞ்சம் நெகிழ்ந்து கலங்கி
அவன்பால்   சென்ற   அறிவினேனாயினேன்.   அப்படிப்பட்ட   எனக்கு,  முள்ளிச் செடியின் 
குலைகழன்று  வீழும்   மலர்களை   விழவுகொள்ளும்  மகளிர் கூட்டுகின்ற  அழகிய வளமிக்க
ஊரனைப் புலத்தலும் கூடுவதோ?