பக்கம் எண் :

136தொல்காப்பியம் - உரைவளம்
 

தலைவி அச்சம்
  

146.

புணர்ந்துடன் போகிய கிழவோள் மனையிருந்து
இடைச்சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி
அன்புறு தக்க கிளத்தல் தானே
கிழவோன் செய்வினைக்கு அச்சமாகும்
  
(7)
 

இளம்
  

என்-எனின், இதுவும் தலைமகட்குரிய கிளவிக்கட்படும் இலக்கணம் நுதலிற்று.
  

(இ-ள்):  களவிற்  புணர்ந்து  உடன்போகிய  தலைமகள்  கற்புக்  கடன்  பூண்டொழுகுங்  காலத்து
மனைக்கணிருந்து,   தான்   முன்னர்   இடைச்   சுரத்தில்   தலைவனுடன்   கண்ட   கருப்பொருண்
முதலியவற்றையும் அவற்றின் தொழிலையும்
1 குறித்துக் கிழவன் அன்புறுதற்குத்2 தக்கவற்றைக்  கூறுதலே
தலைமகன் இயற்றுந் தொழிற்கு அஞ்சும் அச்சமாகும் என்றவாறு.
  

எனவே  புணர்ந்துடன்  போகாத  தலைவி அங்ஙனமிருந்து கூறல் தலைவற்கு அவன் செய்வினைக்கண்
அச்சமாகாதென்றவாறும்
3.
  

உதாரணம்:
  

“கானயானை தோல் நயந்துண்ட
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவையேறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடைபயிரும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர் கொல்லோ தாமே யாம்தமக்கு
   


1. அவற்றின் தொழிலாவது ஆண் தன் பெண்ணிற்கு அன்பாக ஊட்டும் செயல் முதலியன.

2. அன்புறுதலாவது தன்னிடம் அன்பு  மிகக்  கொள்ளல்.  அன்புறு  தகுநகூறலாவது  தன்பால் அன்பு
மிகுமாறு வழியில் நிகழும் கருப்பொருள்களின் செயல்களைக் கூறல்.

3. இதன் கருத்து,  புணர்ந்துடன் போகாத  தலைவி  கிழவோன்  செய்வினைக்கு  அச்சம் கூறாள்; ஏன்
எனின் வழியருமை அவட்கு அறியலாகாது ஆதலின் என்பது.