பாடுடையவாந் தன்மையைநோக்கி என்றவாறாம். ‘முன்னியது’ என்றது புறத்தொழுக்கத்தை. ‘பெரியோரொழுக்கமனைய’ என்றது பெரியோர் ஒழுக்கம் பெரியவென்றவாறு. |
இது, முன்னர் நிகழ்ந்த பொய்ச்சூள் பற்றி நும்மனோர் மாட்டும் இன்ன பொய்ச்சூள் பிறக்குமாயின் இவ்வுலகத்து மெய்ச்சூள் இனி இன்றாம். அதனாற் பெரியோரைத் தமது ஒழுக்கத்தைத் தேருங்காலை அரியவாயிருந்தனவெனத் தலைவனை நோக்கித் தோழி கூறலின் அவனை வழிபாடு தப்பினாளாயிற்று. உள்ளுறையுவமம் இதற்கு ஏற்குமாறுணர்க. |
அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுண் மூழ்கிய கிழவோள் பால் நின்று கெடுத்தற் கண்ணும் - தலைவன் அங்ஙனம் பிறழ்ந்த இடத்து அவன் சென்று சேருந் தகைமை இல்லாமைக்குக் காரணமாகிய புலவியின்கண் அழுந்திய தலைவி பக்கத்தாளாய் நின்று அவள் புலவியைத் தீர்த்தற் கண்ணும். |
உதாரணம்: |
“மானோக்கி நீயழ நீத்தவனானாது நாணில னாயினலிதந் தவன்வயி னூடுதலென்னோ வினி”1 |
(கலி - 87) |
“உப்பமைந்தற்றாற் புலவியது சிறிது மிக்கற்றா னீளவிடல்”2 |
(குறள் - 1302) |
“காலையெழுந்து கடுத்தேர் பண்ணி வாலிழை மகளிர் மரீஇய சென்ற மல்லலூர னெல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவன்றாயே தெறுவதம்மவித் திணைப் பிறத்தல்லே”3 |
(குறுந் - 45) |
1. பொருள்: மான்போலும் கண்ணுடைய தலைவியே! நீயழும்படி நின்னைக் கைவிட்ட தலைவன் பரத்தமையில் அமைந்து நாணம் இன்றியிருப்பானாயின் மேலே அவனிடத்து வருத்தம் தந்து ஊடுதலிற் பயன் யாது? 2. பொருள்: பக்கம் 152ல் காண்க. 3. பொருள்: விடியலில் துயிலெழுந்து தேரைச் சரிசெய்து அணிகலன்களையுடைய பரத்தையரை மருவச் சென்ற ஊரன் மிகவும் விளக்கம் உடையவனாயின் அதற்காகச் சிறுவன் தாய் மயங்கும் உயர்ந்த குடியிற்பிறத்தல் துன்புறுத்துவதேயாகும். |