உணர்ப்பு வயின் வாரா ஊடல் உற்றோள்வயின் உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று தான் வெகுண்டு ஆக்கியத் தகுதிக் கண்ணும், உணர்ப்பு வயின் வாரா ஊடல் உற்றோள் வயின் தலைவன் தெளிவிக்கப்படுந் தன்மைக்கணில்லாத ஊடல் மிகுத்தோளிடத்து. |
உணர்ப்புப் ‘புணர்ப்புப்’ போல் நின்றது. |
உணர்த்தல் வேண்டிய கிழவோன் பால் நின்று-ஊடல் தீர்த்தலை விரும்பிய தலைவன்வயத்தாளாய் நின்று, தான் வெகுண்டு ஆக்கியத் தகுதிக் கண்ணும்-தான் தலைவியைக் கழறி அவள் சீற்றம் போந்தன்மை உண்டாக்கிய தகுதிக் கண்ணும். |
உதாரணம்: |
“துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை யரிமலராம்பன் மேய்ந்த நெறிமருப் பீர்ந்த ணெருமைச் சுவல்படு முதுபோத்துத் தூங்கு சேற்றள்ளற் றுஞ்சிப் பொழுதுபடப் பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து பரூஉக்கொடிப் பகன்றை சூடிமூதூர்ப் போர்செறி மள்ளரிற் புகுதருமூரன் றேர்தர வந்த தெரியிழை நெகிழ்தோ ளூர்கொள் கல்லா மகளிர் தரத்தரப் பரத்தைமை தாங்கலோ விலனெனவறிதுநீ புலத்தலோம்புமதி மனைகெழு மடந்தை யதுபுலந் துறைதல் வல்லியோரே செய்யோணீங்கச் சிலபதங் கொழித்துத் தாமட்டுண்டு தமியராகித் தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப வைகுநராகுத லறிந்து மறியா ரம்மவஃ துடலுமோரே”1 |
(அகம் - 316). |
இது, தோழி தலைவியை வெகுண்டு ஆக்கியவாறு காண்க. |
1. பொருள்: தோழீ! பொய்கை ஆம்பலை மேய்ந்த எருமைப் போத்தானது இரவெல்லாம் சேற்றுப் பள்ளத்தில் தூங்கிக் காலையில் தன் காலில் மிதிபட்டு வரால் மீன் அழியப் புறப்பட்டுப் பகன்றைக் கொடியைச் சூடிப் போர்வீரர் போலப்புகும் ஊரனான தலைவன், மகளிர் தேரில் தரவந்த பரத்தையர் கூட்டத்தை விலக்குதல் |