பொதுவணியியல்27

தாளை வலித்தால் அறுந்தன்மையை யுடையன . நிகளத்தின் கண்ணேயோ ? பகைத்த வேந்தருடைய உரிமைச் சுற்றத்து மான்போன்ற விழியினை யுடையார் கழுத்தில் நல்ல நாளிற் பூட்டிய வலியை யுடைத்தாகிய மங்கலக் கயிறல்லவோ ? எ-று .

வல்லி - விலங்கு . புல்லாதார் - பகைவர் . தானம் - கொடை . வார்தல் - நீளுதல் . கழல் - வீரக்கழல் . மான வேல் - வலிய வேல் . புழை - துளை . தடக்கை - பெரிய கை . நால்வாய் - நான்றவாய் . பொருப்பு - யானை .

இத்துணைச் சுருங்கத் தொடுத்தல் இன்னாதென்று கௌடர் சொல்லுமாறு : -

எ-டு : 'செங்கலசக் கொங்கைச் செறிகுறங்கிற் சீறடிப்பேர்ப்
பொங்கரவ வல்குற் பொருகயற்கட் - செங்கனிவாய்க்
காருருவக் கூந்தற் கதிர்வளைக்கைக் காரிகைத்தாம்
ஓருருவென் னுள்ளத்தே யுண்டு '

(இ-ள்) செம்மை நிறத்தை யுடைத்தாகிய கலசம் போன்ற முலையினையும் , செறிந்த குறங்கினையும் , சிறிதாகிய அடியினையும் , பெரிதாகிய பாம்பின் படம் போன்ற அல்குலினையும் , பகைத்தெதிர்ந்த கயலையொத்த கண்ணினையும் , செம்மையாகிய கொவ்வைக்கனி போன்ற வாயினையும் , கருமையாகிய நிறத்தினையுடைய கூந்தலினையும் , ஒலியோடு கூடிய வளைகளை யுடைத்தாகிய கையினையும் , அழகினையும் உடைத்தாய் இருப்பதொரு வடிவம் என் உள்ளம் விட்டு அகலாது எ-று .

பொங்குதல் - பெருமை .

வி-ரை: சொற்கள் ஒன்றோடொன்று புணருங்கால் இடையே வேற்றுமை யுருபு , உவம வுருபு முதலியன மறைந்துவரின் அவை தொகையாம் . இத்தகைய தொகைச் சொற்கள் மிக்கு வருவது வலியாம் .

கால் நிமிர்த்தால் , கழற்கால் , வேற்கிள்ளி , புழைத் தடக்கை , நால்வாய்ப் பொருப்பு என்ற இடங்களில் வேற்றுமைத் தொகையும் , மழைத்தடக்கை என்றவிடத்து உவமைத் தொகையும் வந்திருத்தலின் இப்பாடல் வலியாயிற்று .

கௌடர் தொகைச் சொற்கள் வருவதே வலி யென்பார் ஆயினும் , ஒரு பாடலில் எத்துணையளவு மிகுதியாகத் தொகைச் சொற்களைப் புணர்க்க முடியுமோ அத்துணையும் பெற்று வரவேண்டும் என்பர் . திரு . சுன்னாகம் குமாரசாமிப் புலவர் அவர்கள் , 'வல்லெழுத்துக்களால்' இயன்ற பாடலில் தொகைச் சொற்கள் மிக்கு வருதலையே கௌடர் விரும்புவர்' என்பர் .

'செங்கலசக் கொங்கை' என்ற பாடலில் , கலசக் கொங்கை , அரவ அல்குல் , கயற்கண் , கனிவாய் என்ற இடங்களில் உவமத் தொகையும் , உருபுத் தொகையும் உடன் வருதல் காண்க .

10. சமாதி

25. உரியபொரு ளன்றி யொப்புடைப் பொருள்மேல்
தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும் .

எ-ன் சமாதி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று .