28தண்டியலங்காரம்

(இ-ள்) முக்கியப் பொருளின் வினையை ஒப்புடைப் பொருள்மேல் தந்து புணர்த்து உரைப்பது , சமாதியென்னும் அலங்காரமாம் எ-று .

'சமாதி' என்னாது 'ஆகும்' என்றதனால் பெயரும் அவ்வாறு உரைக்கப்படும் .

எ-டு : 'அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பரிதி ' - (பெரும்பாண் : 1-2)

எனவும் ,

'விழித்த குவளைக் கழிப்போது வாக்கிய
கள்ளுண்டு களித்த வண்டினம்'

எனவும் ,

'கன்னி யெயில்' , 'குமரி ஞாழல்' - (நற் -54)

எனவும் ,

'கடுங்கை வயலுழவர் காலைத் தடிய
மடங்கி யரியுண்ட நீலம் - தடஞ்சேர்ந்து
நீளரிமேற் கண்படுக்கு நீணீ ரவந்தியார்
கோளரியே றிங்கிருந்த கோ'

எனவும் வரும் .

இஃது இரண்டு நெறியார்க்கும் ஒக்கும்
இவற்றைக் குணவலங்காரம் என்றுங் கூறுப .

அஃதேல் , இன்ன இலக்கணமெல்லாம் முன்னையோர் மொழிந்தது , நடைபல பயின்ற வடமொழிக்கன்றே ; செந்தமிழ் மொழியின் வந்தவாறு என்னை ? எனின் ; இதன் முதனூல் செய்த ஆசிரியர் உலகத்துச் சொல்லையெல்லாம் 1சமஸ்கிருதம் , பிராகிருதம் , அவப்பிரஞ்சம் என மூன்று வகைப்படுத்து , அவற்றுள் சமஸ்கிருதம் புத்தேளிர் மொழி எனவும் , அவப்பிரஞ்சம் இதர சாதிகளாகிய இழிசனர் மொழி எனவுங் கூறினார் , அதனால், பிராகிருதம் எல்லா நாட்டு மேலோர் மொழி எனப்படும் . அல்லதூஉம் பிரகிருதி என்பது இயல்பாகலான் , பிராகிருதம் இயல்பு மொழி .

அந்தப் பிராகிருதத்தைத் தற்பவம் , தற்சமம் , தேசியம் என மூன்றாக்கினார் . அவற்றுள் தற்பவம் என்பன ஆரியமொழி திரிந்து ஆவன அவை : பாபம் - பாவம் எனவும் , 'நிதியந்துஞ்சும்' எனவும் , 'தசநான் கெய்திய பணைமருணோன்றாள்' எனவும் வரும் . தற்சமம் என்பன ஆரியச்சொல்லும் தமிழ்ச் சொல்லும் பொதுவாய் வருவன . அவை : குங்குமம் , மூலம் , மலயமாருதம் என்பன . தேசியம் என்பன அவ்வந் நாட்டவர் ஆட்சிச் சொல்லேயாய்ப் பிற பாடை நோக்காதன . அவை : நிலம் , நீர் , தீ , சோறு என்பன . இவற்றையே செய்யுட் சொல்லெனத் தமிழ் நூலாரும் வேண்டினாராகலின் , இவ்வாற்றான் தமிழ்ச் சொல்லெல்லாம் பிராகிருதம் எனப்படும் . அச்சொற்களால் இயற்றப்படும் எல்லாக் கவிக்கும் அவ்வலங்காரம் அனைத்தும் உரியவாகலின் , ஈண்டு மொழிபெயர்த்து உரைக்கப்பட்டன .


1. 'சங்கிருதம்' என்பதும் பாடம் .