தலைவன் , மனையிலுள்ளாரும் காவலர் முதலியோரும் அறியாதவாறு தலைவியின் வீட்டிற்கு வருகின்றான் எனப் பொருள்படும். தப்புதலின்றித் தலைவியைப் பெறுதற்காக வரும் தலைவனுக்குத் தப்புதலின்றி இரையைக் கொள்ள வரும் புலியை உவமை கூறினமையின் இது தொழிலுவமையாயிற்று.
பயனுவமை:- 'மாரியன்ன.. சென்மே' என்பது மழை பொழியும் மேகத்தை யொத்த கைம்மாறு கருதாத கொடைத் தன்மையையும் , தேரையும் உடைய ஆய் அண்டிரன் எனப் பொருள்படும் . ஆய் அண்டிரனின் கொடைத்தன்மையால் விளையும் பயனுக்கு , மழையின் பயனால் விளையும் நன்மையை உவமை கூறுதலின் பயனுவமையாயிற்று ' செறுநர்த்...தடக்கை' என்பது பகைவரை அழித்தற்கு இடியை யொத்த பெருமையையுடைய கை எனப் பொருள்படும் . இடியால் விளையும் பயனைக் கையால் விளையும் பயனுக்கு உவமை கூறினமையின் பயனுவமையாயிற்று.
பண்புவமைக்கு எடுத்துக் காட்டினவற்றுள் முதற்கண்ணதாகிய நிறம் பற்றிய உவமை பண்பில் அடங்குவதில் தடையில்லை . ஆனால் அடுத்துக்கூறிய வடிவும் , அளவும் கூடப் பண்பில் அடங்குமாறு எங்ஙனம் ? என்ற வினாவை எடுத்துக்கொண்டு உரையாசிரியர் விடை கூறுகின்றார். தொல்காப்பியர் பண்பில் நிறத்தையேயன்றி , வடிவு , அளவு (எல்லை) , சுவை ஆகிய மூன்றும் அடங்கும் என 'வண்ணத்தின் ' என்று தொடங்கும் நூற்பாவில் கூறுகின்றாராதலின் , வடிவும் அளவும் பண்பில் அடங்கத் தடையில்லை என்பது அவர் தரும் விடையாகும் . நன்னூலார் பண்பில் இந்நான்கு மட்டுமேயன்றி வேறு பிறவும் அடங்கும் என்பாராக 'அளவு அறிவு ஒப்பு வடிவு நிறம்கதி , சாதி குடிசிறப் பாதிப் பல்குணம் ' (நன் - 276) என யாத்திருப்பதும் ஈண்டு நினைவு கூர்தற்குரியதாம்.
'செவ்வான் அன்ன மேனி ' அவ்வான் , இலங்குபிறையன்ன விளங்குவால் வையெயிற்று ' என்ற அடிகள் , அகநானூற்றில் கடவுள் வாழ்த்தாகக் கூறப் பட்ட முதற்பாடலின் உள்ளனவாகும். இப்பாடல் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் திருவுருவினைப் பாராட்டி அப்பெருமானின் திருவடிக்கீழ் உலகம் இருத்தலினாற்றான் இனிது இயங்குகிறது என்று கூறுவதாகும்.
'செவ்வான் அன்ன மேனி ' என்பதில் செவ்வானமாகிய ஒரு பொருளை இறைவனின் திருமேனியாகிய ஒரு பொருளுக்கு உவமை கூறுவதால் ஒரு பொருளோடு ஒரு பொருள் ஆயிற்று. வானத்தில் விளங்குகின்ற பிறையின் வெண்மையைப் போன்று அப்பெருமானின் பற்கள் வெண்மையாகவுள்ளன என்பது அடுத்தவரியின் பொருளாகும் , இங்ஙனம் பிறையாம் ஒருபொருளைப் பற்களாம் பல பொருளுக்கு உவமை கூறுதலின் இது ஒரு பொருளோடு பல பொருளாயிற்று . 'களிறே........பட்டன்றே ' என்பது யானையானது சுறா மீனின் கூட்டத்தை யொத்த வாட்படை வீரர்கள் சூழத் தன்மீது இவர்ந்த பாகரை மதியாது மதம் மிக்கது என்று பொருள்படும் . சுறவினமாகிய பல் பொருளை வாளோராகிய பல் பொருளுக்கு உவமை கூறினமையின் இது பல பொருளோடு பல பொருள் ஆயிற்று . ' பெரும்பெயர்க்.... எமக்கே' என்பது மிகு புகழையுடைய கரிகாற் பெருவளத்தானின் முன்னிலையிற் சென்று பொரும் ஆற்றல் இல்லாதவராய்ப் பகைவர்கள் புறமுதுகிட்டோடுமாறு , 'வாடை காற்றே ! நீயும் என்னுடைய தலைவன் வர ஓடுவை ' எனப் பொருள்படும். பகை மன்னரைப் போல என்ற பொருளை , வாடையாகிய ஒரு