பொருளணியியல்39

பொருளுக்கு உவமை கூறினமையின் பல பொருளோடு ஒரு பொருள் ஆயிற்று.

ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமிக்கும்பொழுது , பண்பு பற்றியோ தொழில் பற்றியோ பயன் பற்றியோ உவமிக்க வேண்டும் என்பது நூற்பாவின் கருத்து . 'என்றிவற்றின் ' என்ற மிகையால் ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமிக்கும் பொழுது , இம்முன்றனுள் ஒரோவொன்றன்றி இரண்டும் முன்றும் காரணமாகவும் உவமிக்கப்படும் என்பது பெறப் படுகின்றது . தொல்காப்பியர் 'விரவியும் வரூஉம் மரபின என்ப ' என்று கூறிய இலக்கணத்தையே இவ்வுரையாசிரியர் இம்மிகையால் அடக்கிக் கூறுகின்றார்.

'கான யானை....நாடன்' என்பது காட்டின் கண்ணுள்ள யானையின் துதிக்கையால் பற்றிவிடப்பட்ட மூங்கில் , மீன் பிடிக்கும் தூண்டில் போல ஓங்கி யெழப்பெற்ற காட்டு நாட்டையுடையவன் எனப் பொருள்படும் . 'காந்தள்...தோன்றும் ' என்பது அழகிய காந்தள்மலரில் வாசனை பொருந்திய தாதினை மொய்த்து ஊதுகின்ற வண்டு , கையில் வைத்து ஆடப்படும் வட்டு என்னும் கருவியை யொக்கும் எனப் பொருள்படும் . இவற்றுள் முன்னையதில் வடிவுப் பண்பும் தொழிலும் பற்றி உவமிக்கபட்ட வாறும் பின்னையதில் நிறப் பண்பும், தொழிலும் பற்றி உவமிக்கப்பட்டவாறும் அறிக.

ஒப்புமை தோன்ற ' என்பதால் எதனையும் எதற்கும் உவமையாக்கல் கூடாது . கூந்தலின் கருமைக்கு மேகத்தை உவமை கூறலன்றிக் , கருமை நிறம் ஒன்றேபற்றிக் காக்கையின் நிறத்தை உவமை கூறல் தக்கதன்றாம் ஆதலால்தான் உவமையைக் கேட்போர் மன மகிழுமாறு உவமை கூற வேண்டும் என்றார் . கேட்போர் உளங்கொள்ளுமாறு - கேட்போர் மன மகிழுமாறு.

அதன் வகை

31. அதுவே
விரியே தொகையே யிதர விதரம்
உரைபெறு சமுச்சயம் உண்மை மறுபொருள்
புகழ்தல் நிந்தை நியமம் அநியமம்
ஐயந் தெரிதரு தேற்றம் இன்சொல்
எய்திய விபரீதம் இயம்புதல் வேட்கை
பலபொருள் விகாரம் மோகம் அபூதம்
பலவயிற் போலி யொருவயிற் போலி
கூடா வுவமை பொதுநீங் குவமை
மாலை யென்னும் பால தாகும்.

எ-ன் அவ்வுவமையை விரித்து உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: அச்சொல்லப்பட்ட உவமை யலங்காரம் , விரியுவமையும் , தொகை யுவமையும் , இதரவிதரவுவமையும் , சமுச்சய வுவமையும் , உண்மை யுவமையும் , மறுபொருளுவமையும் , புகழுவமையும் , நிந்தையுவமையும் , நியமவுவமையும் , அநியமவுவமையும் , ஐயவுவமையும் , தெரிதருதேற்ற வுவமையும் , இன்சொலுவமையும் , விபரீதவுவமையும் , இயம்புதல் வேட்கை யுவமையும் , பல பொருளுவமையும் , விகார வுவமையும் , மோக வுவமையும் , அபூத வுவமையும் , பலவயிற்போலி யுவமையும் , ஒருவயிற்போலி யுவமையும்