கூடா வுவமையும் , பொதுநீங்குவமையும் , மாலை யுவமையும் என்னும் இருபத்து நான்கு பாகுபாடு உடையதாம் எ-று.
இவையெல்லாம் சொல்லின் முடியும் இலக்கணத்தவாகலாற் பெரும்பான்மையும் தம் பொருளே இலக்கணம் புலப்படுத்தும் ; அல்லது உரையினுங் கொள்க .
வி-ரை: சொல்லின் முடியும் இலக்கணத்தன - கூறப்பட்ட சொற்களிலிருந்தே அவற்றின் இலக்கணமும் புலப்படுமாறு இருப்பன . எனவே விரியுவமை எனவே இன்னவை விரிந்து நிற்பது என்பதும் , தொகையுவமை எனவே இன்னவை மறைந்து வரும் என்பதும் தாமே விளங்கும் என்பதாம் . எனினும் உரையில் ஆங்காங்கு விளக்கப்பட்டுள்ளன .
அவற்றுள் (1) விரியுவமை என்பது பண்பு முதலியன விரிந்து நிற்பது .
எ-டு : 'பால்போலு மின்சொற் பவளம்போற் செந்துவர்வாய்
சேல்போற் பிறழுந் திருநெடுங்கண் - மேலாம்
புயல்போற் கொடைக்கைப் புனனாடன் கொல்லி
அயல்போலும் வாழ்வ தவர்'
(இ-ள்) பாலை யொத்து இனிதாகிய சொல்லினையும் , பவளத்தையொத்துச் சிவந்து விளங்கிய வாயினையும் , சேலை யொத்துப் பிறழ்தலால் விளங்கிய அழகினை யுடைத்தாகிய நெடிய கண்ணினையுமுடைய அவர் வாழுமிடம் , மின்னும் முழக்கமும் , காலவரைவுமின்றிச் சான்றோராலே புகழப்பட்டு உயர்ந்த நெறியே ஒழுகிய மழை போன்று கொடுத்தலால் விளங்கிய கையை யுடையனாகிய சோழனுடைய கொல்லிமலைப் பக்கம் போலும் எ-று .
பிறழ்தல் - உகளுதல் . திரு - அழகு . புயல் - மழை . புனனாடன் - சோழன் , கொல்லி - ஒரு மலை . அயல் - பக்கம் .
வி-ரை: பண்பு முதலியன - பண்பும் தொழிலும் பயனும் ஆகியன . பொருளுக்கும் உவமைக்கும் பொதுத்தன்மையாகவுள்ள இவை விரிந்து நிற்பது விரியுவமையாம் .
'பால் போலும் இன்சொல்' , 'பவளம்போல் செந்துவர்வாய்' என்ற தொடர்களில் இனிமையும் செம்மையுமாகிய பண்பும் , 'சேல்போல் பிறழுந் திருநெடுங்கண்' என்ற தொடரில் பிறழ்தலாகிய தொழிலும் , 'புயல்போல் கொடைக்கை' என்ற தொடரில் கொடையாகிய பயனும் விரிந்து நிற்றல் காண்க .
இனி உவமையும் பொருளும் உருபும் பொதுத்தன்மையும் ஆகிய நான்கும் விரிந்து வருதலே விரியுவமை என்பாரும் உளர் . இப்பாடல் இதற்கும் ஒக்கும் . பொருள் - உபமேயம் .
(2) தொகையுவமை என்பது பண்பு முதலியன தொக்குநிற்பது .
எ-டு : 'தாமரை 1வாண்முகத்துத் தண்டரளம் போன்முறுவல்
காமரு வேய்புரைதோட் காரிகையீர் ! - தேமருவும்
பூங்குழலின் வாசப் பொறைசுமந்து நொந்ததோ
பாங்குழலுந் தென்றற் பரிசு '
1. 'போல்முகத்து'என்பதும் பாடம் .