பக்கம் எண் :


104


     (வி - ம்.)1 கொருவுதல் - குற்றுதல்; குத்துதலென்று வழங்குகின்றது. கெண்டுதல் - வெட்டுதல், சுவல் - தோள்மேல். மடை- மடுக்கப்படுவது. உயவும் - வருந்தும். ஆடைசூழ விரிப்பது கலைக்கப்பட்ட உடும்பு ஆடைமேலோடினால் அதன் வளைந்த உகிர் துகிலிலே சிக்கிக்கொண்டு விழுமாதலிற் பற்றுதற் கெளிதாதற் பொருட்டு. ஈயல்பிடிப்பது :-கோடுகளை ஒழுங்குபெறச் சிதைத்து மேலேவிழலால் மூடி மீது சேற்றைப்பூசி ஒரு துளைவைத்து அதில் புகைமூட்டியை வைத்தூதினால் உள்ளிருந்த ஈயல் வெளிவரும், அங்கே வேறொரு புழைசெய்து புகைபோகும் வழியுண்டாக்கி அதில் ஒரு தாழியை வைத்திருந்தால் வந்த ஈயலெல்லாம் தாழியிலே படியுமென்றதாம். ஏனைய பற்றுதல் வெளிப்படை.

     உள்ளுறை :-உடும்பு முதலாயவற்றைக் கொண்டுவந்த வேட்டுவன் அவற்றை இல்லின்கண்ணே போகட்டுக் கள்ளின் செருக்கினால் மயங்கிக்கிடக்கு மென்றது, அயல்நாடு சென்று பலவகையாலே பொருளீட்டிவந்த யான் அவற்றை இல்லின்கண்ணிட்டு நம் காதலி நலனையுண்டு காமக்களியாலே செருக்கெய்தி மயங்கிக்கிடப்பேனென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - பாகன் தேர்கடாவல்.

     (பெரு - ரை.) கார்ப்பருவத் தொடக்கத்தே ஒருதலையாக மீண்டு வருகுவல் கவலற்க என்று போயினன் ஆகலின், அப்பொழுது கார்ப்பருவம் வந்துவிட்டமையையும் தான் பருவம் கடந்து வருகின்றமையையும் பாகற்குணர்த்துவான், அவள் ஊர் காட்டு நாட்டது, ஆண்டுப் புறவில் முல்லை நுண்முகை அவிழ்ந்த ஆதலால், இனி அவள் நெஞ்சம் பொறாது பெரிதும் உயவும் ஆதலால் விரைந்து செலுத்துக என்றான் என்க. புறவின் நுண்முகை யவிழ்ந்தமை பொறைதலை மணவாமைக்கும் உயவுதற்கும் ஏதுவாதல் நுண்ணிதின் உணர்க. முல்லை முகையவிழ்ந்த தென்றது - கார்ப்பருவம் வந்துவிட்டதுகாண் என்றுணர்த்தியவாறாம்.

(59)
  
     திணை : மருதம்.

     துறை : இது, சிறைப்புறமாக உழவற்குச் சொல்லுவானளாய்த் தோழி செறிப்பறிவுறீ இயது.

    (து - ம்.) என்பது, சிறைப்புறமாக வந்திருந்த தலைமகன் தலைமகளை இல்வயிற் செறித்தமையறிந்து விரைவில் வரையுமாற்றானே தோழி உழவனை நோக்கிச் சொல்லுவாள் போன்று 'உழவனே, நீ நாற்றுநடுமாறு உழச்சென்ற வயலிலுள்ள கோரையையும் குவளையையும்
  
 1. 
கொரீஇ என்பது இக்காலத்து அருகிய சொல்; பொருள் விளங்கவில்லை. கன்றுகளுக்குப்போடும் இருப்பு முள்ளாலாகிய வாய்க்கூட்டுக்குக் "கொரி" என்று திருநெல்வேலியை அடுத்த ஊர்களில் வழங்கப்படுகிறது; மாட்டுமடியில் ஊட்டச்சென்றால் அம்முள் மடியில் குத்துந் தன்மையா யிருத்தலால் அந்தப் பொருளைக்கொண்டு குத்திப் பிடிப்பதாக உரையெழுதினேன். குத்தாமலே பிடித்து வாலைக் கழுத்திற்பிணித்து வளையமாகக் காவிக் கொணர்தலுமுண்டு; கொரீஇ என்பதற்கு வேறு பொருள் விளக்கமாகத் தெரிகிறவரையில் குத்து என்பதைக் கொள்க.