பக்கம் எண் :


111


அரிய காவலிற் படுத்தலாலே இங்ஙனம் பசலையாகி விளிந்தொழியக் கடவதுதானோ? எ - று.

     (வி - ம்.) சுரம் - இடம். நிவத்தல் - ஓடுதல். புலவல், அல் : சாரியை,

     தன்னொழுகலாற்றைப் பொறாது அலர் தூற்றலால் ஊர் அறனின்றென்றாள். கேள்வனைக் கூடாதவாறு இற்செறித்தமையால் அன்னையும் அறனிலளென்றாள், களவொழுக்கம் எண் வகைமணத்தினு ளொன்றாதலின் அஃதறனேயாம்; அதனுக்கு ஊறுசெய்தல் அறனின்மையென்றவாறு. பசலையாகிவிளிவதோ என்றது பசலைபாய்தல்.

     உள்ளுறை :-கழிச்சேற்றிலோடுங் குதிரைகளினுடம்பிலே பட்ட சேறு கடல் நீரால் கழுவப்படுமென்றது - களவொழுக்கத்தை மேற்கொண்ட தலைமகள் மேலும் தலைமகன்மீதுமேறிய அலர் அவ்விருவரும் வரைந்துகொள்ளுதலால் நீக்கப்படவேண்டு மென்றதாம்.

     இறைச்சி :-மணற்பரப்பிலே பரதவர் மீனுணக்கலானாகிய புலவு நாற்றத்தைப் புன்னை மலர் மணம் வீசுதலாற் போக்கிக் கமழாநிற்குமென்றது - சேரியிடத்தே தலைவிக்காக எமர்பெறக் கருதிய பொருளாசையைத் தலைவன் சான்றோரை முன்னிட்டுத் தரும் அருங்கலமுதலியவற்றாலே போக்கி வரைவுமாட்சிமைப்பட முடிப்பானாகவென்றதாம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம.் பயன் - செறிப்பறிவுறுத்து வரைவுகடாதல்.

(63)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, பிரிவிடைத் தலைவியதருமைகண்டு தூது விடக்கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகன் பிரிந்தவிடத்துத் தலைமகள் வருந்தியதறிந்த தோழி அவன்பால் தூதுவிடக் கருதுதலும் அதனையறிந்த தலைவி தோழியை நோக்கி, 'நம்மைக் கைவிட்ட அவரைக் கருதா தொழிக; உள்ளம் அவர்பாற் சென்றமையால் என்னுடம்பு வறிதாயிரா நின்றது; இனி வரினும் நமது நோய்க்கு மருந்தாக மாட்டார், ஆதலின், அவர் அங்கேயே இருப்பாராக; நம் நோயை நமர்காணா தொழிவாராக' வென வருத்தமிகுதி தோன்றக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனைக் "கொடுமை யொழுக்கம் தோழிக் குரியவை; வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல்-கற்- 6) என்னும் விதியின் கண் காய்தலின்பாற் படுத்துக.

    
என்ன ராயினும் இனிநினை வொழிக 
    
அன்ன வாக இனையல் தோழியாம் 
    
இன்ன மாகநத் துறந்தோர் நட்பெவன்