(வி - ம்.) வெண்குவடு - வெளியமணற் குன்றுமாம். இறைகொள்ளல் - தங்குதல். வழங்கலும் வழங்கும், முழுவதூஉங் காரிய வாசகமாயே நின்றது. ஊர்க்கு : ஊரின்கண் : உருபுமயக்கம்.
துறைபுலம்பின்று என மக்களியங்காமையும் இயங்காதவழி ஆறலைப்போரால் ஏதநிகழுமென்பதுங் குறிப்பித்தாள். தலைவியோடுறைகவென்பாள், குருகுகள் மனையிலே தங்குதல் கொண்டன காணுதி ரென்றாள். நெறியிலே தன் கொம்பா லூறிழைக்குஞ் சுறாமீன் துணையோ டியங்கலுமாமென இதுவும் நெறியினது ஏதங்கூறித் தலைவியொடு தலைப் பெய்திருக்கப் பணித்ததாம். எமரும் வேட்டம்புக்கன ரெனத் தமரா லேதநிகழாமை கூறினவள் செல்லுதிரேல் நெறியில் அவர்கண்டு ஊறிழைப்பினும் இழைப்பரென அச்சுறுத்தினாளுமாம். இரவில் தலைவியின் மனையகத்துத் தங்குவதனை விரும்புதற்கு வரைந்தன்றி வெளிப்படையாகத் தங்கவீயலாததாதலாலிது வரைவுகடாதலாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) உறைவு இன் ஊர் எனக் கண்ணழித்துத் தங்குதற் கினிமையான ஊர் என அதனாலும் தங்குதற்கோர் ஏதுக் காட்டினள் எனக் கூறல் சிறப்பாம். எம்மூர் உறை இன்னூர் எனத் தனித்தனி கூட்டுக. இச் செய்யுளை ஆசிரியர் நச்சினார்க்கினியர் "இது இரவுக்குறி வேண்டிய தலைவற்குத் தோழி உடன்பட்டுக் கூறியது" என வேறொரு துறையாகக்கொண்டு இதனை, "புணர்ச்சிவேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் துறைக்கு எடுத்துக்காட்டுவர்.
செங்கதிர் என்றும், மாமலர் கனைப்ப என்றும், பொங்கதிர், முழவிசை என்றும் உழைகடல் என்றும் பாடவேற்றுமைகள் உள.
(67)
திணை : குறிஞ்சி.
துறை : இது, சிறைப்புமாகத் தோழி தலைவிக்குரைப்பாளாய்ச் செறிப்பறிவுறீஇயது.