பக்கம் எண் :


122


இல் தெள்மணி கொடுங்கோல் கோவலர் குழலொடு ஒன்றி ஐதுவந்து இசைக்கும் அருள் இல் மாலை - செம்மாப்பையுடைய நல்ல பசுவின் குற்றமற்ற மணியின் தெளிந்த ஓசை வளைந்த கோலையுடைய ஆயர்தங் குழலோசையோடு சேர்ந்து மெல்லிதாக வந்து ஒலியாநிற்கும் அருள் இல்லாத இம்மாலைப் பொழுதானது; ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் இனைய ஆகித் தோன்றின் - பொருளீட்டு் முயற்சியால் நம்மைக் கைவிட்டு அகன்ற தலைவர் சென்ற நாட்டிலும் இத்தன்மையாகத் தோன்றுமாயின்; வினை வலித்து அமைதல் ஆற்றலர் மன் - அவர் தாம் ஏறட்டுக் கொண்ட செயலின் கண்ணே உறுதிகொண்டு தங்கியிருப்பாரல்லர்; அப்படி இல்லாமற் கழிகின்றது; எ - று.

     (வி - ம்.) பார்ப்பு - இளம்பறவை. உறா : உடன்பாட்டெச்சம். தெண்மணி - மாலையிற்போதரும் பசுக்களை ஏறுசென்று புணர்தலாலே அப்பசுவின் கழுத்திட்ட மணி விரைந்தொலிக்கும் தெளிந்த ஓசை. ஐது - மெல்லிது. மன் : கழிவு.

    மண்டிலம் ஆற்றி மறையவென்றது பகலின் வெம்மையடங்கியதும் காமக்களியாட் டயர்தற்குரிய பொழுது போதருகின்றதுங் குறிப்பித்தது. பறவை யடையவென்றது குடம்பையிற் பிரிந்துசென்ற புள்ளினம் மீண்டும் வந்து புகும்பொழுதத்துங் காதலர் வந்திலரேயென மாலை நோக்கி யிரங்கியதாம். இரலை பிணையைத் தழுவுங்காலம் அதுவேயாதலின் இங்ஙனம் காதலர் வந்தென்னைத் தழுவினாரிலரேயென இதுவும் அம்மாலையை நோக்கி வருந்திக் கூறியதாம். முல்லை முகைவாய்திறப்பவென்றது நறு மணங் கொடுக்கும் முல்லை மலருங்காலம் மாலையாதலின் இதுவும் அம்மாலையை நோக்கியதாயிற்று. காந்தள் புதலில் விளக்கெடுப்பவென்றது மாலைமறையின் விளக்கொடாயினும் போதரி னலனெய்துவேனென இதுவும் அதனையே நோக்கிற்று. ஏனைய வெளிப்படை. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) இச் செய்யுளோடு,

  
இளையிருள் பரந்ததுவே எற்செய்வான் மறைந்தனனே 
  
களைவரும் புலம்புநீர் கண்பொழீஇ யுகுத்தனவே 
  
தளையவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டுளதாங்கொல் 
  
வளைநெகிழ எரிசிந்தி வந்தவிம் மருண்மாலை"     (கானல் வரி, 40-2) 

என்றற் றொடக்கத்துச் செய்யுள்களையும் நினைவு கூர்க. "காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்" என்றஞ்சுவாள் 'அருளில் மாலை' என்றாள்.

(69)
  
     திணை : மருதம்.

     துறை : இது, காமமிக்க கழிபடர்கிளவி.