(து - ம்.) என்பது, தலைவன் தான் பொருள்வயிற் பிரிவதைத் தலைவிக்குணர்த்தும்படி வேண்டத் தோழி, 'நும்பாலுள்ள கண்ணோட்டத்தால் அவள் விடுவிப்பினும் புறாக்கள் ஒன்றனையொன்று புணர்ச்சிக்கு அழைக்கின்ற குரலைக் கேட்டு அவள் பெரிதும் ஆசையாலழிந்து தேயுமாறு அவளைத் தைவந்து விடுத்துப் போதற்கும் வன்மையுடையீரோ' வென்று அவன் செலவழுங்கக் கூறாநிற்பது,
(இ - ம்.) இதற்கு, "பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்," (தொல்-கற்- 9) என்னும் விதிகொள்க.
| மன்னாப் பொருட்பிணி முன்னி இன்னதை |
| வளையணி முன்கைநின் இகுளைக்கு உணர்த்தெனப் |
| பன்மாண் இரத்தி ராயிற் சென்மென |
| விடுந ளாதலும் உரியள் விடினே |
5 | கண்ணும் நுதலும்நீவி முன்நின்று |
| பிரிதல் வல்லிரோ ஐய செல்வர் |
| வகையமர் நல்லில் அகவிறை உறையும் |
| வண்ணப் புறவின் செங்காற் சேவல் |