கதிரிட்டுமுறுக்கிய வலியகயிற்றாற் பின்னிய பெரியவலையை இடிபோல முழங்குகின்ற அலைகளையுடைய கடலிலிடும்பொருட்டு; நிறையப் பெய்த அம்பி காழோர் சிறை அரும் கறிற்றின் பரதவர் ஒய்யும் - நிறைய ஏற்றப்பட்ட தோணியைப் பரிக்கோற்காரர் பிணித்துச் செலுத்துகின்ற அடக்குதற்கு அரிய களிற்றியானையைப் போலப் பரதவர் செலுத்தாநிற்கும்; சிறு வீ ஞாழல் பெருங்கடல் சேர்ப்பனை - சிறிய மலரையுடைய ஞாழல் மரங்களையுடைய பெரிய கடற்கரைக்குத் தலைவனைக் குறித்து; ஏதிலாளனும் என்ப - அவன் நுமக்கு நட்புடையனல்லன் ஏதிலாளனுமாயினான் என்று பலருங் கூறாநிற்பர். போது அவிழ் புது மணல் கானல் புன்னை நுண் தாது அசை கொண்டல் வளி தூக்கு தொறும் - அதற் கேற்ப மலர் விரிகின்ற புதிய மணற்பரப்பையுடைய சோலையிலுள்ள புன்னையின் நுண்ணிய மகரந்தப்பொடி ஓடுகின்ற கீழ்க்காற்று வந்து மோதுந்தோறும்; குருகின் வெள்புறம் மொசிய - குருகின் வெளிய முதுகில் நெருங்கத் தூர்க்கா நிற்கும்; தெண்கடல் கண்டல் வேலிய ஊர் - தெளிந்த கடற்கரையிலுள்ள கண்டல் மரம் நிரம்பிய வேலியையுடைய இவ்வூரானது, அவன் பெண்டு என அறிந்தன்று ஆர்க்கும் பெயர்த்தல் அரிது - அவனால் விரும்பப்படும் பரத்தையானவள் அச்சேர்ப்பனுக்கு மனைக்கிழத்தி யாயினன் என்று கூறாநின்றது. அங்ஙனம் உண்டாகிய வார்த்தையை பெயர்த்தொழித்தல் இனி யாவர்க்கும் அரியதொன்றாகும்; ஆதலிற் பாண ஈண்டு வாராதே கொள்! எ - று.
(வி - ம்.) அம்பி - தோணி. ஒய்யும் - செலுத்தும். தூக்குதல், அசைத்தலுமாம். மொசிதல் - நெருங்கல். இனி ஒசியவெனப் பிரித்துத் தாழவென்றுரைப்பினுமாம். போதவிழ் புன்னை யெனவும் ஆர்க்கு மூரெனவு மியைக்க. ஆதலினென்பது முதற் குறிப்பெச்சம்.
உள்ளுறை:- பரதவர் தாம் திரித்த பெருவலையைக் கடலிலிட்டு மீன் பிடிக்கவெண்ணித் தோணியிலேற்றிச் செலுத்துவரென்றதனாலே தலைவன் தான் கற்றசூழ்ச்சியை ஒரு துாதுவழியே விடுத்து என்னை ,,,,,, யமாக்கவெண்ணி அச்சூழ்ச்சியை நினக்குக் கற்பித்து நின்னைவர விடுத்தானென்தாம், கறிற்றின் என்ற ஏனையுவமம் பரதவர் வலையைத் தோணியிலேற்றிச் செலுத்துமென்ற உள்ளுறை யுவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்துநின்றது, இஃது வினையுவமப் போலி,
இறைச்சி :- கீழ்க்காற்று மோதுதலாலே புன்னை நுண்டாது குருகின் மேலுதிர்ந்து அதனை மறைக்குமென்றது தலைவன் பிரிதலினாகிய காம நோயாலே பசலைதோன்றி என் மெய்ம்முழுது மூடி மறைத்து வேறுபடுத்தியதென்றதாம், மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின் மறுத்தல்,
(பெரு - ரை) கதிர் - பயிறுமுறுக்கும் ஒருகருவி, பாணன் நும் காதலர் என்றானாகலின் அவனை ஏதிவாளனும் என்று கூறாநிற்பர் காண்! என்றாள் என்க.