பக்கம் எண் :


134


    திணை : குறிஞ்சி.

    துறை : இது, பின்னின்ற தலைவன் நெஞ்சிற்குரைத்தது.

    (து - ம்.) என்பது, தோழியை மதியுடம் படுக்கச் சென்ற தலைமகன், அவள்பாற் குறையுற்று நிற்றலைக் கண்டு இவனொரு குறையுடையான்போலுமென அத்தோழி ஆராயுங் காலத்து அதுவரையும் பொறாத தன்னெஞ்சை நோக்கி நெஞ்சே, நமது காதலியினோக்கமே நம்மை இவள்பாலிரந்துபின் னிற்கும்படி செலுத்துகின்றதாகலின், இவள் உடன்படுங்காறும் நீ வருந்தாதே யென்று அஃது ஆற்றுமாறு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "தோழி குறை அவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்." (தொல்-கள- 11 ) என்னும் விதி கொள்க.

    
மலையமா ஊர்ந்து போகிப் புலையன் 
    
பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கவர் 
    
அருங்குறும்பு எருக்கி அயாவுயிர்த் தாஅங்கு 
    
உய்த்தன்று மன்னே நெஞ்சே செவ்வேர்ச் 
5
சினைதொறுந் தூங்கும் பயங்கெழு பலவின் 
    
சுளையுடை முன்றில் மனையோள் கங்குல் 
    
ஒலிவெள் ளருவி ஒலியின் துஞ்சும் 
    
ஊரலஞ் சேரிச் சீறூர் வல்லோன்  
    
வாளரம் பொருத கோண்ஏர் எல்வளை 
10
அகன்தொடி செறித்த முன்கை ஒண்ணுதல் 
    
திதலை அல்குல் குறுமகள் 
    
குவளை யுண்கண் மகிழ்மட நோக்கே. 

    (சொ - ள்.) நெஞ்சே செவ் வேர்ச் சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் சுளையுடை முன்றில் மனையோள் - நெஞ்சே ! சிவந்த வேர்களையுடைய கிளைகடோறும் தூங்கும் பழங்கள் மிக்க பலாவின் சுளைகளையுடைய முன்றிலின்கண் மனையோளானவள்; கங்குல் ஒலி வெள் அருவி ஒலியில் துஞ்சும் ஊர் அல் சேரிச் சீறூர் - இரவில் நெருங்கி விழுகின்ற வெளிய அருவியின் ஒலியைக் கேட்டு உறங்காநிற்கும் பேரூரல்லாத (சிலவாய) சேரிகளையுடைய சீறூரின்கண்ணே; வல்லோன் வாள் அரம் பொருதகோண் ஏர் எல்வளை அகன் தொடி செறித்த முன்கை-கைவல் வினைஞன் வாளரத்தா லராவிய வளைந்த அழகிய ஒளியையுடைய வளையும் அகன்ற தொடியும் அணிந்த முன்னங்கையையும்; ஒள்நுதல் திதலை அல்குல் குறுமகள் குவளை உண்கண் மகிழ் மட நோக்கு - ஒள்ளிய நெற்றியையும் தித்தி படர்ந்த அல்குலையும்