(து - ம்.)என்பது, அறத்தொடு நிற்றலின்பின் வரையாது தலைமகன் நெடுந்தூரம் பொருள்வயிற் பிரிந்துபோன பின்பு, ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி அவர் குறித்த கார்காலம் வந்துற்ற தாதலின், இன்னே வந்து நின்னை வரைந்து கொள்வர்; அதுகாறும் வருந்தாதொழியெனத் தேற்றிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "நாற்றமுந் தோற்றமும்" (தொல்-கள- 23) என்னும் நூற்பாவின்கண் "ஆங்கதன் தன்மையின் வன்புறை" என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்கப் |
| பெருவரை அடுக்கத் தருவி யார்ப்பக் |
| கல்லலைத் திழிதருங் கடுவரற் கான்யாற்றுக் |
| கழைமாய் நீத்தங் காடலை யார்ப்பத் |
5 | தழங்குகுர லேறொடு முழங்கி வானம் |
| இன்னே பெய்ய மின்னுமால் தோழி |
| வெண்ணெ லருந்திய வரிநுதல் யானை |
| தண்ணறுஞ் சிலம்பின் துஞ்சுஞ் |
| சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே. |
(சொ - ள்.) தோழி வெள்நெல் அருந்திய வரி நுதல் யானை - தோழீ ! மூங்கிலின் வெளிய நெல்லைத் தின்ற வரி பொருந்திய நெற்றியையுடைய யானை; தண் நறுஞ் சிலம்பின் துஞ்சும் - தண்ணிதாகிய நறுமணங் கமழு மலைப்பக்கத்திலே துஞ்சா நிற்கும்; சிறி இலைச் சந்தின வாடு பெருங்காட்டு - சிறிய இலையுடைய சந்தன மரத்தினையுடைய வாடிய பெரிய காட்டினகத்து; சூர் உடை நனந்தலைச் சுனை நீர் மல்க - அச்சத்தையுடைய இடமகன்ற சுனையில் நீர் நிறையவும்; பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப - பெரிய மூங்கில்களையுடைய மலைப்பக்கத்தில் அருவிகள் ஆரவாரிப்பவும்; கல் அலைத்து இழிதரும் கடுவரல்கான் யாற்று - கற்களைப் புரட்டிக்கொண்டு ஓடிவருகின்ற மிக்க விசையினையுடைய கானியாற்றின் கண்ணே; கழை மாய் நீத்தம் அலைகாடு ஆர்ப்ப - பற்றுக் கோடாகிய மூங்கிலும் முழுகுமாறு பெருகிய வெள்ளத்தின் அலைகாட்டிற் சென்று மோதா நிற்கவும்; தழங்கு குரல் ஏறொடு முழங்கி - ஒலிக்கின்ற இடியேற்றொடு முழக்கஞ் செய்து; வானம் இன்னே பெய்ய மின்னும் - முகில்கள் இப்பொழுதே மழை பெய்யவேண்டி மின்னா நிற்கும்; இக் காலத்தை நோக்கினவுடன் அவர் இன்னே வந்து நின்னை வரைந்து கொள்வராதலின், நீ வருந்தாதே கொள் ! எ - று.
(வி - ம்.) சூர்-அச்சம். நனந்தலை - அகன்ற இடம். வரை-மூங்கில். அடுக்கம் - மலைப்பக்கம். நீத்தம் - வெள்ளம். ஆல் : அசை; மூன்றனுருபின் பொருளதோரிடைச் சொல்லுமாம். சிறிய இலை: