பக்கம் எண் :


151


கடலின் துறையிடத்து மேய்கின்ற இப்பியின் ஈரிய புறத்து மிக விழாநிற்கும்; சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும் பெருந்தண் கானலும் நினைந்த அப் பகலே - சிறு குடியிலுள்ள பரதவர் மகிழும் மகிழ்ச்சியையும் பெரிய தண்ணிய கழிக்கரையிலுள்ள சோலையையும் நான் நினைந்த அப் பகற்பொழுதின்கண்ணே; உள்ஊர் மாஅத்த முள் எயிற்று வாவல் ஓங்கல் அம் சினைத்தூங்கு துயில் பொழுதின் - ஊரின் உள்ளதாய மாமரத்திலிருக்கின்ற முட்போன்ற எயிற்றினையுடைய வௌவால் உயர்ந்தவொரு கிளையிற் சென்று பற்றித் தூங்கா நின்று துயிலுற்ற பொழுதிலே; வெல்போர்ச் சோழர் அழிசி அம் பெருங்காட்டு நெல்லி அம் புளிச் சுவை கனவி ஆங்கு - தனக்குக் கிட்டப்பெறாத வெல்லும் போரையுடைய சோழர் குடியிற் பிறந்த ஆர்க்காட்டின் உளனாகிய அழிசி என்பவனது பெரிய காட்டின்கண் உள்ள நெல்லிப்பழத்தின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக் கனவுகண்டாற் போல யானும் அவரொடு முயங்கினதாகக் கனவுகாண; அது கழிந்தன்று - அவ்வின்பமெல்லாம் விழித்தவுடன் ஒழிந்து போயிற்று மன் !; எ - று.

    அது - அக்கனவின் முயங்கியவின்பம். உள்ளூர் - ஊருளென்க. பரதவர் மகிழ்ச்சியைக் கருதுதலும் எனக்கு மகிழ்ச்சியுண்டாயிற்று. விழைவு விடுத்த விழுமியோரையும் விழைவுறுத்தும் பொழிலாதலின் அதனைக் கருதுதலும் எனக்கு மகிழ்வுண்டாயது. மகிழ்ச்சி கனவுண்டாய்க் கழிதலானே அவர் முயக்கம் இனிக் கனவினுமரியதுபோலா மென்றிரங்கியதென்பது. இப்பியின்புறத்தைப் புன்னையின் தாது மூடிக்கொள்ளுதல்போலப் பசப்பு என்மெய்யைக் கரந்துகொண்டதென்றவாறு. இது கனவொடு மயங்கல். ஏனை மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) காமம் இடையீடு பட்டுழித் தலைவன் தலைவியர் கனாக்காண்டலும் உண்டு என்பதனை, "கனவும் உரித்தால் அவ்விடத்தான" எனவரும் பொருளியற் சூத்திரத்தாற் கொள்க. அது என்றது; யான் நம் பெருமானைப் புணர்ந்ததாகக் கண்ட அக்கனவு என்பது படநின்றது. நாணத்தால் கனவு கண்டவிடத்தை விரிதோதாது 'அது' என்று சுட்டி யொழிந்தாள்; இவ்வாறு கனாக்கண்டு மருள்தலை,

  
"அலந்தாங் கமையலே னென்றானைப் பற்றியென் 
  
 நலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவும் 
  
 கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் 
  
 புலம்பல் ஓம்பென வளிப்பான் போலவும்" 
  
 முலையிடைத் துயிலு மறந்தீத்தோ யெனவும்  
  
 நிலையழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும் 
  
 வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத் 
  
 தலையுற முன்னடிப் பணிவான் போலவும்" 

எனவரும் கலி (128) யானுமுணர்க.

(87)